முதல்வர் ஸ்டாலினுடன் நான் நிற்பது இதனால்தான்... காரணத்தை சொன்ன கமல்ஹாசன்!

கமல்ஹாசன் தமிழச்சி
கமல்ஹாசன் தமிழச்சி

சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் என்னை மாதிரியான ஆட்கள் எல்லாம் இங்கு வந்து நிற்கிறோம். நீங்கள் அவரை விமர்சனம் செய்தீர்களே என்று கேட்கிறார்கள். விமர்சனம் செய்வது எங்கள் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நான்குமுனைப்போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை தென்சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், '' குஜராத் மாடல் தான் சிறப்பு. திராவிட மாடல் ஒன்றுமில்லை என இனி பேச முடியாது. அதற்கு ஒரு பெரிய மலர்வளையத்தை ஸ்டாலின் வைத்துவிட்டார். அதுவும் தாமரை பூக்களால் வைத்துவிட்டார்.

கமல்
கமல்

மக்களுக்கு அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பத்தாது தான். நாம் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசாவை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. அதில் இருந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம். உங்களுடைய கடமை கூட. இங்க கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்தியில் ஒருவர் ஆயிரம் கோடிகளை ஒருவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தியா முழுக்க கட்டணமில்லா பேருந்து பயணத்தைக் கொடுத்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். சிறு வியாபாரம் செய்யும் மகளிர் செல்வதற்கு உதவியாக இருக்கிறது. இந்தியா பின்பற்ற வேண்டியது திராவிட மாடலைத் தான்.

நமக்கு ஒரு ரூபாயில் 29 பைசாவும் இன்னொருவருக்கு 7 ரூபாயும் மற்றவருக்கு 3 ரூபாயும் கொடுக்கிறார்கள். நான் பொறமைப்படவில்லை. ஆனால் அங்கேயும் முன்னேற்றம் வந்துவிட்டதாக தெரியவில்லை. அவர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள். பாஜகவிடம் கடந்த 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என கேட்டால் பதிலில்லை. அவர்கள் நேரு என்ன செய்தார் என்பதைப் பற்றி கூறி வருகின்றனர். தன்னுடைய சொத்துகளை எல்லாம் நாட்டுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு 16 வருஷம் நேரு சிறையில் இருந்தார். இவர்கள் அரசின் துறைமுகத்தை இன்னொருவருக்கு கொடுக்கிறார்கள். சாதி, மதம் எனத் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்ல எனக்குப் பயம் இல்லை. அதை உங்கள் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

கமல்
கமல்

நாயகன் படத்தில் ஒரு டயலாக் வரும் 'அடிச்சா தான் அடியிலிருந்து தப்பிக்க முடியும்' என்று, ஆனால் ஜனநாயக நாட்டில் ஆளை அடிக்க முடியாது. ஆனால் ஒரு சித்தாந்தத்தை அடிக்கலாம். அப்படி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வறுமையை திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்; கல்வியின்மை; வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை எப்படியெல்லாம் அடிக்க முடியுமோ அப்படி எல்லாம் திருப்பி திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக சர்வாதிகாரத்தை திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் என்னை மாதிரியான ஆட்கள் எல்லாம் இங்கு வந்து நிற்கிறோம்.

நீங்கள் அவரை விமர்சனம் செய்தீர்களே என்று கேட்கிறார்கள். விமர்சனம் செய்வது எங்கள் கடமை உங்கள் கடமையும் கூட. ஆனால் ஆபத்து என்று வரும் பொழுது 'என் கையில் பிஸ்லரி பாட்டில் இருக்கிறது வீடு பற்றி எரிந்தாலும் அணைப்பதற்கு கொடுக்க மாட்டேன்' என சொல்பவன் நல்லவன் கிடையாது. நான் அப்படிப்பட்டவன் கிடையாது. எனக்கு முதலில் பரிவட்டம் கட்டு அப்போதான் தேரை இழுப்பேன் என்று சொல்லுபவன் நான் கிடையாது. இந்த ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் கேட்டிருந்தால் தமிழச்சியின் சீட்டை எனக்குக் கொடுத்திருப்பார்கள். எந்த சீட்டில் நான் நிற்பேன் என எதிர்பார்த்தார்களோ அந்த சீட்டில் நிற்பவருக்காக நான் வந்திருக்கிறேன். 'அடுத்து தேர்தல் நடக்குமா?' என அறிஞர்கள் பயப்படுகிறார்கள். நம் விரலால் சரித்திரத்தை மாற்ற முடியும்” என்று அவர் தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...   

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு... தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!

கோவையில் ரூ.3.54 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது!

கிளம்பிட்டாரு நவரச நாயகன் கார்த்திக்... அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரமாம்!

11 வயதில் வீட்டை விட்டு அனுப்பி வைத்தார்கள்...மனம் உடைந்த பிரபல நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in