இடஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்த பீகார் சட்டப்பேரவை ஒப்புதல் - பாஜகவும் ஆதரவு!

இடஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்த பீகார் சட்டப்பேரவை ஒப்புதல் - பாஜகவும் ஆதரவு!

அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடுகளை தற்போதுள்ள 60% (பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு 10% ஆணை வழங்கியது உட்பட) இல் இருந்து 75% ஆக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு பீகார் சட்டசபை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18% இடஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25% இடஒதுக்கீடு, பட்டியலிட்ட சாதிகளுக்கு 20% மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு 2% இடஒதுக்கீடு வழங்குகிறது.

இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு பீகார் அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது. அப்போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மாநிலத்தில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவில், மாநில மக்கள்தொகையில் அவர்களின் பங்கிற்கு ஏற்ப, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தும் வகையில் மசோதா கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

இந்த ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி பீகார் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநிலத்தின் மக்கள் தொகையில் 64% ஆவர்.

செவ்வாயன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் சமூக-பொருளாதார தரவுகளின்படி, பீகார் மக்கள் தொகையில் 34% "ஏழைகள்", அதாவது அவர்களின் மாத வருமானம் ரூ. 6,000-க்கும் குறைவாக உள்ளது.

சமூக-பொருளாதார தரவுகளுடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீதான விவாதத்திற்குப் பிறகு பேசிய நிதிஷ் குமார், ஜாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவு எடுத்ததால் இடஒதுக்கீட்டை உயர்த்துவது சாத்தியமாகும் என்றார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

"அனைத்து உண்மைகளையும் அனைவருக்கும் முன் கொண்டு வருவதற்கு பீகார் விரிவான வேலைகளைச் செய்துள்ளது. 75% ஒதுக்கீட்டிற்குப் பிறகு, 25% இடங்கள் ஃப்ரீ சீட்கள். ஒதுக்கீட்டின் அதிகரிப்பு ஓபிசிகள் மற்றும் இபிசிகள் தங்கள் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக பங்கைப் பெற அனுமதிக்கும். ஜாதி எண்ணிக்கை குறைந்துவிட்டன அல்லது சில ஜாதிகள் புள்ளிவிவரங்களை வேண்டுமென்றே அதிகரித்து காண்பித்ததாக சொல்பவர்கள் தவறாகப் பேசுகிறார்கள். 1931க்குப் பிறகு இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு" என்றார் நிதிஷ் குமார்.

மாநிலத்தின் எதிர்க்கட்சியான பாஜகவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவுக்கு ஆதரவளித்தது. "பீகாரில் இடஒதுக்கீடு வரம்புகளை அதிகரிப்பதற்கு பாஜக தனது முழு ஆதரவை வழங்கியது. எஸ்சி பிரிவினருக்கான 16 சதவீத இடஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். எஸ்டி பிரிவினருக்கான 1% இடஒதுக்கீட்டை 2% ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இடஒதுக்கீட்டுக்காக எந்தக் கட்சிக்கும் பாஜக எப்போதும் ஆதரவளிக்கிறது" என்று அம்மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in