இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் 38 மீனவர்களை நிபந்தனைகளுடன் அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 67 பேரை இலங்கை கடற்படை, படகுகளுடன் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்துள்ளது.
இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தூதரக அளவில் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது.
இதையடுத்து, 4 பேரை நேற்று இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இந்நிலையில், இன்று 38 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் இந்த விடுதலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 67 பேரில் 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், 25 பேர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.