டெல்லியில் இருந்து ரயிலில் வந்த கார் கியாஸ் சிலிண்டர்கள்: சென்னையில் பீகார் வாலிபர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள்

டெல்லியில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சலில் கொண்டு வந்த 7 கார் கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்களுடன் பீகார் வாலிபர்
பறிமுதல் செய்யப்பட்ட கியாஸ் சிலிண்டர்களுடன் பீகார் வாலிபர்

ரயிலில் பேராபத்தை விளைவிக்கும் கியாஸ் சிலிண்டர், பட்டாசு, மண்ணெண்ணெய் உட்பட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனை மீறி இவ்வகையான பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜமுதாவில் இருந்து சென்னை வரும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சல்கள் ஏற்றிச் செல்வதற்காக, டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ரயில் பெட்டியை வாடகைக்கு எடுத்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் கார்களுக்கு பயன்படுத்தப்படும் 7 சிஎன்ஜி(CNG) சிலிண்டர்கள் சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் பெட்டியில் இறங்கி வைக்கப்பட்டிருந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

இதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த சிலிண்டர்களை கொண்டு செல்வதற்காக வந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலு யாதவ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, டெல்லியில் இருந்து தனியார் நிறுவனம் காருக்கு பயன்படுத்தும் சிஎன்ஜி கியாஸ் சிலிண்டர்களைப் பார்சலில் அனுப்பியது தெரியவந்தது.

மேலும் லாலு யாதவ் சிலிண்டரைக் கொண்டு செல்ல வந்த போது போலீஸில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் ரயில்வே சட்டப்படி எளிதில் தீப்பற்றக்கூடியப் பொருட்களை ரயிலில் அனுப்பிய டெல்லியைச் சேர்ந்த தனியார் பார்சல் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்யுமாறு ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்ப உள்ளதாகவும் , இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் சுற்றுலாப் பயணிகள் ரயிலில் சமையல் செய்ய கொண்டு வந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in