'திருவிளையாடல்’ நாகேஷ் போல புலம்பவைத்து விட்டார்கள்... நடிகர் சத்யராஜ்!

நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ்

எனக்கு முதல் படம் போல 'சிங்கப்பூர் சலூன்’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில்...
டிரெய்லர் வெளியீட்டு விழாவில்...

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் ஜனவரி 25 வெளியாகவுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, “45 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் சலூனுடைய முக்கியத்துவம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஹேர்ஸ்டைல் என்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்தபோது ஒரு ஹேர்ஸ்டைலிலும் பொது வாழ்க்கைக்கு வந்தபோது வேறொரு லுக்கிலும் இருந்தார்.

அதுபோலதான் ரஜினிகாந்த், விஜயகாந்தும். இப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமான ஹேர்ஸ்டைலை வைத்து படம் எடுப்பது நல்ல விஷயம். சினிமாவில் ஹீரோவுக்கு வெற்றிகள் வர வர அடுத்தடுத்தப் படங்களில் பட்ஜெட்டை ஏற்றினால் மட்டுமே வேறொரு தளத்திற்குப் போக முடியும். ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘ரன் பேபி ரன்’ இப்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என இவரது படங்களின் பட்ஜெட் அடுத்தடுத்து அதிகமாகிக் கொண்டே போகிறது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில்...
டிரெய்லர் வெளியீட்டு விழாவில்...

இதற்கு முன்பு கவுண்டமணி, மணிவண்ணன், வடிவேலு இவர்களுடன் சேர்ந்துதான் காமெடி செய்திருக்கிறேன். ஆனால், நானே ஒத்தைக்கு ஒத்தையாக நின்று காமெடி செய்தது இந்தப் படத்தில்தான். திருவிளையாடல் நாகேஷ் போல, ‘தனியா நடிக்க வச்சுட்டானே’ என்று புலம்பிக் கொண்டேதான் நடித்தேன்.

இயக்குநர் கோகுலின் அந்த தைரியத்திற்கு நன்றி. வில்லன் ரோல் நடித்துவிட்டு கெஸ்ட் ரோல் நடிக்க வேண்டும் என்றால் யோசிப்பேன். ஆனால், அந்த தைரியத்தை விஜய்சேதுபதி எனக்குக் கொடுத்தார். நான் முதல் படத்தில் நடித்ததைப் போல இந்த ’சிங்கப்பூர் சலூன்’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஏனெனில், காமெடி நடிகர் என எனக்கு இன்னொரு கதவு திறக்கப்படும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in