
மயிலாடுதுறை மாவட்டத்தின் தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், திருக்கடையூர் அருகே நான்கு வழிச்சாலைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குவியல்கள் சாலையில் சரிந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் நேற்று இரவு தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 77.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிக்காக மணல் குவியல்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக, சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல்கள் சரிந்து மழையில் கரைந்து வழிந்தோடி வருகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வரதராஜன் என்பவர் தனது காரில் உறவினர்களுடன் காரைக்காலில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்தார், திருக்கடையூர் அருகே சாலையில் வழிந்தோடிய மணலில் சிக்கி அவரது கார் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இருப்பினும் காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் மணல் குவியலில் சிக்கியிருந்த காரை அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி மீட்டனர். மேலும் சாலை முழுவதும் மணல் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சாலையில் சிக்கிச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
எனவே, உடனடியாக சாலையில் உள்ள மணலை அகற்றி சீரமைக்க வேண்டும் எனவும், மண்சரிவு மேலும் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!