கே.கே.சி.பாலு
கே.கே.சி.பாலு

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

கவுண்டர் இனத்தைச் சார்ந்த பெண்கள் ஒன்றுகூடிய ஒரு இடத்தில் நாங்கள் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த பையன்களைத்தான்  திருமணம் செய்து கொள்வோம் என்று அவர்களை  உறுதிமொழி எடுக்க வைத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி  பெரிதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சாதியத்தை ஊக்குவிக்கும் சம்பவங்கள் நடந்தால், அதற்கு எதிராக தொடர்ந்து கடுமையாக குரல் எழுப்பி வருகிறது. அந்த கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இத்தகைய   வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு  உள்ளார்.

அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கே.கே.சி.பாலு சொல்லச் சொல்ல பெண்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள்.   "கல்யாணம்  பண்ணிக்கிறோம்.. கவுண்டர் வீட்டு பையனையே.. இது போதும், இது போதுமே ..எனக்கு வேறு எதுவும் வேண்டாம் அம்மா, சத்தியமே சத்தியமே, சின்னமலை சத்தியமே" என்று பெண்கள் உறுதிமொழி ஏற்றுக் கொள்கிறார்கள்.  

வன்னியரசு
வன்னியரசு

கொங்கு கவுண்டர் வீட்டு பெண்கள், கவுண்டர் வீட்டு பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கே.கே.சி.பாலு உறுதிமொழி ஏற்க வைத்த வீடியோ, சாதியத்தை ஊக்குவிப்பதாக விசிக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வன்னியரசு வெளியிட்ட பதிவில், "சாதியக் கட்டமைப்பை பாதுகாக்க புது புதுசா அண்ணாமலை கிளம்புகிறார்கள்.(கவுண்டர் பையனையே கல்யாணம் கட்டணுமுன்னு சொன்னதும் வெட்கப்பட்டு தலைகுனியும் பெண்களைப் பாருங்கள்)  என்று கூறியுள்ளார். 

அவர் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்  சர்ச்சையாகியுள்ளது. இதற்குப் பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in