போராட்டம் தொடரும்... அடக்குமுறையைக் கையாண்டாலும் அசராத இடைநிலை ஆசிரியர்கள்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, கலைந்து செல்லுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டும் போராட்டத்தைக் கைவிடாததால், இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நிலையிலும், உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் ஆசிரியர்கள், அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர் என்று இணையதளங்களில் செய்தி பரவி வருகிறது.

தங்களது போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெறவில்லை என்றும், அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும், போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை முன்வைத்து சென்னையில் போராடி வந்த இடைநிலை ஆசிரியர்களை பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசு இவர்களின் கோரிக்கையை விரைவாக பரிசீலனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உருவானது. இதனிடையே இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே இடைநிலை ஆசிரியர்கள், தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த விவகாரத்தில் உடனடியாக எவ்வித முடிவும் எடுக்க முடியாது எனவும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும் அதன் பரிந்துரைகள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

மேலும் தொகுப்பு ஊதியம் கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும் எனவும் ரூ.10 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பிறகும், போலீஸாரை வைத்து அடக்குமுறையைக் கையாண்டாலும் சம வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in