HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!

HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!

எம்.ஜி.ஆர்., கலைஞர், இந்திராகாந்தி, ஜெயலலிதா, கண்ணதாசன், ரஜினி என ஒவ்வொருத்தரின் ரசனையும், ஆளுமையும், கருத்துக்களும் ஒவ்வொருவிதம். இந்த அத்தனை ஆளுமையாளர்களும் மதித்த நபர் சோ. இவர்கள் அனைவரிடமும் தன்னுடைய கருத்தைச் சொல்கிற சுதந்திரம் சோவுக்கு இருந்தது. இவர்கள் அனைவரும் நடிகர் சோவின் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இவர்கள் அனைவரையுமே தவறு செய்கிற போதோ, தடம் மாறுகின்ற போதோ எதிர்க்கிற முதல் ஆளாக சோ இருந்திருக்கிறார்.

அரசியலையும், அரசியல்வாதிகளையும் பற்றி நக்கலும் நையாண்டியுமாகச் சொல்வதற்காகவே பத்திரிகையை துவங்கினார் சோ. பின்னாளில் நடிகர் சோவுக்கு ‘துக்ளக்’ சோ என்றே அடையாளம் கிடைத்தது. கூடுதல் மரியாதையும் கிடைத்தது!

எம்.எஸ்.வி - சோ
எம்.எஸ்.வி - சோ

வக்கீலுக்குப் படித்தார். மிகப்பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் வழக்கறிஞராக இருந்தார். முக்கியமான நிறுவனங்களின் பெரிய பெரிய பிரச்சினைகளையெல்லாம் தன் வாதத்திறமையால் தீர்த்து வைத்தார். அதேசமயம், நாடகங்களின் மீது ஏற்பட்ட காதலால், நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பிறகு நாடகக் கம்பெனி தொடங்கி, நிறைய நாடகங்களை மேடையேற்றினார். அந்தக் காலத்தில், ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து, நாடக உலகைக் கலக்கினார்.

‘இதுதான்... இப்படித்தான்...’ என்றில்லாமல், எந்த மாதிரியாகவும் கதை சொல்லி, அதை காமெடியாகவும் கேலியாகவும் சொல்வதில் தனி முத்திரை பதித்தார்.

சிவாஜியுடன் சோ...
சிவாஜியுடன் சோ...

சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘பார் மகளே பார்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் சோ. முதல் படத்திலேயே ‘மெட்ராஸ் பாஷை’ பேசி கலக்கியெடுத்திருப்பார். பிறகு எம்ஜிஆருடன், சிவாஜியுடன், ஜெமினியுடன், ரவிச்சந்திரனுடன் என்று மிகப்பெரிய ரவுண்டு வந்தார். ஜெய்சங்கரும் சோவும் இணைந்தால், அங்கே கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது என்று தமிழ் சினிமா உலகம் பேசிக்கொண்டது.

முக்தா சீனிவாசனும் முக்தா ராமசாமியும் சகோதரர்கள். இவர்களின் முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ‘நிறைகுடம்’ மாதிரியான படங்களுக்கு வசனம் எழுதினார். நாகேஷ், தேங்காய் சீனிவாசன் முதலானோருடன் சேர்ந்து அவர் செய்த காமெடிகளும் ரகளை கிளப்பின.

சோ...
சோ...

‘சோ’வின் பெயர் ராமசாமி. அவரின் அப்பா பெயர் ஸ்ரீநிவாசன். அப்புறம் எப்படி ‘சோ. ராமசாமி’ என்றும் ‘சோ’ என்றும் பெயர் பெற்றார்? பகீரதன் எழுதிய ‘தேன்மொழியாள்’ எனும் நாடகத்தில் ‘சோ’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரையும் ஈர்த்தார். அன்றிலிருந்து ‘சோ’ ராமசாமி என்றும் ‘சோ’ என்றும் அழைக்கப்பட்டார். பிறகு ‘சோ’ எனும் ஒற்றை எழுத்தே பெயரானது.

கமல், ரஜினி காலகட்டத்திலும் தொடர்ந்து நடித்து வந்தவர் தான். அதற்கு முன்னதாக, ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலிலும் ஈடுபாடு சோவுக்கு இருந்தது.

சோ
சோ

நடிக்கிற படங்களில் சின்னச்சின்னதாக அரசியல் கட்சிகளையும் நிகழ்வுகளையும் கேலி செய்து வந்தார். கல்லூரி விழா ஒன்றில் ஒன்றரை மணி நேரம் பேச வேண்டும். ‘’உனக்கென்ன தெரியும்... இவ்ளோ மணி நேரம் எப்படிப் பேசுவே?’’ என்று உடன் வந்த நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டே போனார் சோ. மொத்த மாணவர்களும் கரவொலி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பேச்சை முடித்துவிட்டு வரும்போது, உதித்தது தான் பத்திரிகை எனும் சிந்தனை. ‘நாமே பத்திரிகை நடத்தினால் என்ன?’ என்று தோன்றியது. மறுநாள்... ‘இந்து’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் விளம்பரமொன்று கொடுத்தார். ‘நான் அரசியலை விமர்சித்து பத்திரிகை நடத்தலாம் என்று இருக்கிறேன். அதற்கு ஆசிரியராகவும் இருக்க விரும்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நான் பத்திரிகை ஆரம்பிக்கலாமா, வேண்டாமா?’’ என்று கேட்டிருந்தார். ஏகப்பட்ட பேர் ’நடத்துங்கள்’ என்று சொல்ல... தொடங்கப்பட்டதுதான் ‘துக்ளக்’ பத்திரிகை.

’துக்ளக்’ பத்திரிகை வெளியான நாளில், காலையில் இருந்து கால்கடுக்க நின்று, பத்திரிகையை வாங்கிச் சென்றவர்கள் ஏராளம். ‘துக்ளக்’ ஆரம்பித்த காலம் முதல் இன்றைக்கு வரை வாசகர்களாக இருப்பவர்களும் அநேகம்.

‘மாட்டுக்கார வேலன்’, ‘சூரியகாந்தி’, ‘தங்கப்பதக்கம்’ என பல படங்களில், இவரின் காமெடி நடிப்பும் அரசியல் நக்கலும் ரசிக்கப்பட்டது. ’துக்ளக்’கில் சினிமா விமர்சனமும் வந்தது. ஆனால் அது புதுபாணியாக இருந்தது. எம்ஜிஆர், சிவாஜி முதலான பிரபலங்கள் அனைவரும் ‘சோ புக்ல நம்ம படத்தைப் பத்தி என்ன எழுதியிருக்கப் போறானோ?’ என்று ஆர்வத்துடனும் கொஞ்சம் பதற்றத்துடனும் கவனித்தார்கள். மகத்துவம் மிக்க இயக்குநராக நம் மனதில் இன்றைக்கும் இருக்கிற இயக்குநராகத் திகழ்கிற ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன் தான் ’துக்ளக்’கில் வேலை பார்த்து, சினிமா விமர்சனங்களையெல்லாம் எழுதினார்.

சோ...
சோ...

திரையுலகில் காமெடி நடிகர்தான் சோ. பத்திரிகை உலகில், அரசியல்வாதிகளுக்கு வில்லனாகவே திகழ்ந்தார். ஒருகட்டத்தில், மக்களின் பிம்பமாக, உணர்வாக இருந்து அவர் எதிர்த்த தருணங்களில், ஹீரோவாக ஒளிர்ந்தார். தன் எழுத்தால், திரைக்கதையால், கதையால், நாடகத்திலும் சினிமாவிலும் சிறந்து விளங்கினார். பத்திரிகையிலும் இப்படித்தான் தன் முத்திரையை, தடத்தைப் பதித்தார்.

காங்கிரஸை ஆதரிப்பார். தடக்கென எதிர்ப்பார். திடீரென ஜனதாவின் பக்கம் செல்வார். தமிழகத்தில், கருணாநிதியை கிழிகிழியெனக் கிழிப்பார். பிறகு அவரையே பாராட்டுவார். ஒருகட்டத்தில், எம்ஜிஆரையும் கேலி செய்வார்.

இந்திரா காந்தியை எதிர்த்தாலும் இந்தியை ஆதரித்தார். இந்துத்வாவை ஆதரித்தார். இந்து மத பாரம்பரியங்கள் குறித்தும் மகாபாரதம் குறித்தும் ஏராளமான நூல்கள் எழுதினார். சோ எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இன்றைக்கும் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன.

பத்திரிகை உலகில், தமிழ்வாணன் கேள்வி - பதில்களுக்குத் தனி வரவேற்பு இருந்தது. அதையடுத்து அந்தப் பெருமை சோவுக்கும் கிடைத்தது. நான்கைந்து பக்கத்துக்கு கேள்வி - பதில் பகுதி இருக்கும். ஒவ்வொரு கேள்வியிலும் நக்கலும் நகைச்சுவையும் இருக்கும். கிண்டலும் நையாண்டியும் பண்ணுவார். இந்த கேள்வி பதிலை, ஏதோ ஜோக்ஸ் படித்துவிட்டு சிரிப்பது போல், வயிறு குலுங்கச் சிரித்தார்கள் வாசகர்கள்.

அதேசமயம், எதிர்பாராத கேள்விக்கும் எவரும் யோசிக்கவே யோசிக்காத பதில்களையும் தருவதில் தன்பக்கம் திருப்பிக் கொள்வதில் சாமர்த்தியக்காரர். ஒருமுறை, 'திருமுருக கிருபானந்த வாரியார் வெளிநாட்டில் பிறந்திருந்தால்...?’ எனும் கேள்வியை வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா... ‘ஒண்ணும் ஆகியிருக்காது. வெளிநாட்டில் பிறந்திருந்தால், இத்தனை ஞானநூல்கள் அவருக்குக் கிடைத்திருக்காதே!’ என்று பதிலளித்தார்.

ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டினார். திடீரென விலகி திமுக - தமாகா என கூட்டணி அமைக்கவும் அந்தக் கட்சிகளுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்கவும் செய்தார். 1996ல் அரசியலில் பெரிய திருப்பம், ரஜினியால் ஆட்சி மாற்றம் என்று இன்று வரலாறு பேசுகிறார்கள். ஆனால், அப்போது இந்த கூட்டணி அமைய முதல் முயற்சியை முன்னெடுத்து, ரஜினியை அழைத்து வந்தவரும் சோ தான். இவை அனைத்தும் தெரிந்தும், அந்த தோல்விக்கு பின்னரும் ஜெயலலிதா, சோவுடன் நட்பு பாராட்டியே வந்தார்.

வெளியிடங்களுக்கு வரும்போது, காக்கியுமில்லாத பிரெளனுமில்லாத ஒரு வித பச்சை நிற வண்ணத்தில், ஒரு யூனிஃபார்ம் போல் சஃபாரி மாதிரியான அதே உடையைத்தான் அணிந்து வருவார். பைப் பிடிப்பார். சிகரெட் புகைப்பார். ஒளிவுமறைவின்றி இருப்பார். தலைமுடியில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால், மொட்டைத்தலையுடனே கடைசி வரை இருந்தார். தன் மொட்டைத் தலையை பிளஸ்ஸாக்கிக் கொண்டார்.

பழசை மறக்காமல் நாடக நண்பர்களுடன் தொடர்பிலேயே இருந்தார். நாடக விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வத்துடனே இருந்தார். ஏரியா கவுன்சிலர் தொடங்கி தலைநகர் டெல்லி வரைக்கும் பரவியிருக்கிற அரசியல் தொடர்புகள் என எல்லாமே சோவின் அதிரிபுதிரி சரவெடிகள்!

1934 அக்டோபர் 5-ம் தேதி பிறந்த சோ, 2016 டிசம்பர் 7-ம் தேதி மறைந்தார். அவரது 89-வது பிறந்தநாள் இன்று. சட்டம், நாடகம், சினிமா, அரசியல், பத்திரிகை என ஐந்து துறைகளிலும் முத்திரை பதித்த சோ... எப்போதுமே ஆச்சரியக்குறி தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in