கோயில் வாசலில் சாலையில் நடந்த திருமணம்
கோயில் வாசலில் சாலையில் நடந்த திருமணம்

கிறிஸ்தவ பெயராக இருந்ததால் இந்துப் பெண்ணுக்கு கோயிலுக்குள் திருமணம் நடத்த மறுப்பு... சாலையிலேயே திருமணம் நடத்தி பரபரப்பு!

தூத்துக்குடியில், இந்து மதத்தைச் சேர்ந்த அந்தோணி திவ்யா என்பவரது பெயர், கிறிஸ்தவ பெயர் போல் உள்ளதால் கோயிலுக்குள்ளே திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தம்பதிகள் உறவினர்கள் புடைசூழ சாலையில் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுச்சாமி. இவரது மகன் கண்ணன். இவருக்கும் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த முருகன் - ரேவதி தம்பதியின் மகள் அந்தோணி திவ்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அங்குள்ள முருகன் சன்னதியில் வைத்து திருமணம் நடத்த உறவினர்கள் முடிவு செய்திருந்தனர்.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயம்
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயம்

இதையடுத்து திருமணத்திற்கான ஆவணங்களை கோயில் நிர்வாகத்திடம் இருவீட்டாரும் சமர்ப்பித்துள்ளனர். இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், பெண்ணின் பெயர் கிறிஸ்தவ பெயராக இருப்பதால் திருமணம் நடத்த அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பெண்ணின் சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை உறவினர்கள் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர்.

அப்போது பெண்ணின் கல்விச் சான்றிதழில் கிறிஸ்தவம் என்ற பெயர் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோயிலுக்குள்ளே இருவருக்கும் திருமணம் நடத்த அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் தான் திருமணம் நடத்த அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினரும், அங்கிருந்த பூசாரிகளும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கோயின் வெளியே புதுமணத் தம்பதியை வாழ்த்தும் உறவினர்கள்
கோயின் வெளியே புதுமணத் தம்பதியை வாழ்த்தும் உறவினர்கள்

ஆனால் முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட விரும்பாத குடும்பத்தினர், கோயிலுக்கு வெளியே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இதன்படி மணமகள் அந்தோணி திவ்யா கழுத்தில் மணமகன் கண்ணன் கோயிலுக்கு வெளியே சாலையில் வைத்து தாலி கட்டினார்.

இது தொடர்பாக பெண்ணின் உறவினரான ராஜேந்திரன் என்பவர் கூறும் போது, ”மணமக்களின் ஆவணங்கள் அனைத்தையும் முறையாக சமர்ப்பித்துள்ளோம். பெயரில் அந்தோணி என்ற கிறிஸ்தவ பெயர் மணமகள் பெயருக்கு முன்பாக இருந்ததால் கோயில் நிர்வாகத்தினர் திருமணம் செய்ய மறுத்துவிட்டனர். இது தொடர்பாக எழுத்துபூர்வமாக விளக்கம் கேட்டோம். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் அதனை மறுத்து திருமணம் செய்து வைக்க முடியாது என எதேச்சதிகாரமாக தெரிவித்தனர்” என குற்றம் சாட்டினர்.

கோயிலின் உள்ளே வழிபாடு நடத்திய புதுமணத் தம்பதி கண்ணன் - அந்தோணி திவ்யா
கோயிலின் உள்ளே வழிபாடு நடத்திய புதுமணத் தம்பதி கண்ணன் - அந்தோணி திவ்யா

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமண வீட்டார் வலியுறுத்தியுள்ளனர். கிறிஸ்தவ பெயர் கொண்ட மணமகளின் திருமணத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வைத்து உறவினர்கள் புடை சூழ நடைபெற்ற திருமணம் அதைவிட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in