உலகக்கோப்பையிலிருந்து விலகினார் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் - காரணம் இதுதான்!

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அந்த அணிக்கான கடைசி லீக் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

உலகக் கோப்பையில் நேற்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு இடது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு நிழற்படம் (எக்ஸ்-ரே) எடுத்துப் பார்க்கப்பட்டதில் கை விரலில் எலும்பு முறிவு உறுதியானது. இந்த நிலையில், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

இது தொடர்பாக வங்கதேச அணியின் மருத்துவக் குழு தரப்பில் கூறியதாவது: வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு கை விரலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டு அணிக்காக பேட் செய்தார். போட்டி முடிவடைந்த பிறகு அவருக்கு உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவர் குணமடைய 3-4 வாரங்கள் ஆகும். அவர் இன்று வங்கதேசம் புறப்படுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையில் தனது கடைசி லீக் போட்டியில் வங்கதேசம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய வங்கதேச - இலங்கை மோதலின்போது 25-வது ஓவரில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, புதிய பேட்ஸ்மேனாக மேத்யூஸ் இறங்கி தனது முதல் பந்தை எதிர்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். மேத்யூஸின் ஹெல்மெட் பட்டை உடைந்ததால் இந்த காலதாமதம் ஆனது.

பந்தை எதிர்கொள்ள ஐ.சி.சி ப்ளேயிங் கண்டிஷன்ஸ் அனுமதிக்கும் நேரத்தை விட மேத்யூஸ் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், வங்கதேச கேப்டன் ஷகிப் டைம்ட் அவுட்டிற்கு விதிகளின்படி முறையிட்டார். முறையீட்டை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்ட கள நடுவரின் கோரிக்கைகளை ஷகிப் அல் ஹசன் பொருட்படுத்தவில்லை. இறுதியில் மேத்யூஸ் வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்திலேயே மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கியுள்ளது. கிரிக்கெட் வரலாற்றின் முதன்முறையாக கொடுக்கப்பட்ட இந்த டைம் அவுட் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in