HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

நடிகர் கமல்ஹாசன்...
நடிகர் கமல்ஹாசன்...

சினிமாவுக்கென்று நான், சினிமாவால் நான் என திரைக்கலைஞர்கள் இருப்பது அபூர்வம். அப்படியான ஒரு கலைஞர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி நடிகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்ட கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று. தற்போது சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் மையம் கொண்டிருக்கும் அவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன்...
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன்...

* ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்தில் நடித்ததற்காக நான்கு வயதிலேயே குடியரசுத் தலைவரால் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசன்...
நடிகர் கமல்ஹாசன்...

அதன் பிறகு, தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அறியப்பட்டபோது கமலுக்கு 25 வயது. அத்தனை சிறிய வயதிலேயே சினிமா மீதான தன் ஆர்வத்தை பல வகைகளிலும் அவர் தீராத முனைப்போடு வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

கமல்ஹாசன், நாகேஷ்...
கமல்ஹாசன், நாகேஷ்...

*சினிமாவில் கமல்ஹாசனின் பிரியத்துக்குரியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் நடிகர்கள் சிவாஜி, ஜெமினி, நாகேஷ், இயக்குநர் பாலச்சந்தர், மனோரம்மா, கிரேஸி மோகன், அனந்து இவர்களெல்லாம் முதன்மையானவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நிகழ்வுகளில் இவர்களைப் பற்றி நினைவுக் கூறுவதை இவர் தவறுவதேயில்லை.

ஸ்ரீதேவி, கமல்ஹாசன்...
ஸ்ரீதேவி, கமல்ஹாசன்...

* 'மூன்று முடிச்சு’, '16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘மீண்டும் கோகிலா’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ என பல படங்களில் நடிகை ஸ்ரீதேவியுடன் ஒன்றாக இணைந்து நடித்தார் கமல்ஹாசன். திரையில் இவர்களது ஜோடி பலருக்கும் பிடித்ததாக இருந்தது. பல சமயங்களில் இவர்களுக்கிடையே காதல் என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.

ஒரு சமயம் ஸ்ரீதேவியின் அம்மாவே, கமலிடம் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ளும்படி சொன்னார். ஆனால் கமல்ஹாசன் அதை மறுத்து ‘என் குடும்பத்தைப் போல நினைப்பவர்களிடம் திருமணம் என்பது நான் யோசித்துப் பார்க்க முடியாதது. ஸ்ரீதேவியை நான் முதலில் பார்த்தபோது அவருக்கு 13 வயது. எங்கள் இரண்டு பேருக்கும் சகமரியாதை உண்டு’ எனத் தெரிவித்தார்.

'இந்தியன்’ தாத்தா...
'இந்தியன்’ தாத்தா...

* தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் எதாவதொரு புது விஷயத்தை பரிசோதித்துப் பார்ப்பதில் கமலுக்குத் தீராத ஆர்வம் உண்டு. ’குணா’, ‘ஹேராம்’, ‘குருதிப்புனல்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘விக்ரம்’, ‘தசாவதாரம்’, ‘இந்தியன்’ இப்படி பல படங்களைப் பட்டியலிடலாம். எந்தவொரு ஹீரோவும் தனது 100 வது படத்தில் செய்யத் துணியாத ஒரு விஷயமாக ‘ராஜபார்வை’ படத்தில் முயற்சி செய்தார் கமல். இதில் கண் தெரியாத கதாபாத்திரம் ஏற்றிருப்பார் கமல்.

சரிகாவுடன் கமல்...
சரிகாவுடன் கமல்...

* தனது சொந்த வாழ்வில் பல சர்ச்சைகளை சந்தித்தவர் கமல்ஹாசன். வாணி, சரிகா, கெளதமி என பலருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்தது, பல நடிகைகளுடன் கிசுகிசு என வலம் வந்தவர் கமல். இதற்கெல்லாம் அவர் தந்த ஒரே பதில், ‘என் சினிமாவை விமர்சியுங்கள். ஆனால், என் படுக்கையறையை எட்டிப் பார்க்க உங்களுக்கு அனுமதி இல்லை’ என்பது தான்.

கமல்ஹாசன் திலீப்குமாருடன்...
கமல்ஹாசன் திலீப்குமாருடன்...

* பல பரிசோதனை முயற்சிகளையும், வெற்றிப் படங்களையும் தந்த கமலுக்கு கடந்த சில வருடங்களாக அரசியலிலும் சினிமாவிலும் இறங்குமுகமாகவே இருந்தது. அந்த சமயத்தில்தான் அவருக்கு ‘விக்ரம்’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைக் கொடுத்தது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் சமயத்தில், ‘என்னுடைய ‘தேவர் மகன்’ படத்தை ரீமேக் செய்து நடிக்குமாறு ‘சூப்பர் ஸ்டார்’ திலீப் குமாரிடம் ஒருமுறை வேண்டுகோள் வைத்தேன். ஆனால், அப்போது அவர் நடிப்பை நிறுத்தியிருந்த சமயம் என்பதால் அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டார்’ என்றார்.

கமலும் ரஜினியும்
கமலும் ரஜினியும்

*கமலும் ரஜினியும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட கதையில் இவர்கள் மாற்றி நடித்ததும் உண்டு. அப்படியான கதைகள்தான் ‘இந்தியன்’ படமும் ‘எந்திரன்’ படமும்.

‘இந்தியன்’ கதையை முதலில் ஷங்கர், ரஜினியை மனதில் வைத்துதான் எழுதியிருந்தார். ஆனால், அதில் நடித்தவர் கமல். அதைப் போலவே, ‘எந்திரன்’ கதையை ஷங்கர் ஆரம்பத்தில் கமலை மனதில் வைத்து, சுஜாதாவுடன் இணைந்து எழுத இறுதியில் அதில் நடித்தவர் ரஜினி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in