காலதாமதம் செய்த காங்கிரஸ்; கலக்கும் காளியம்மாள்... மயிலாடுதுறை மனநிலை என்ன?

வேட்பு மனு தாக்கல் செய்யும் சுதா
வேட்பு மனு தாக்கல் செய்யும் சுதா

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின்  சார்பில் மிகக் காலதாமதமாக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அக்கட்சிக்கான சாதக பாதகங்கள் என்ன என்ற கேள்வி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியை பொருத்தவரை அதிமுக கூட்டணியாக இருந்தாலும் சரி,  திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சிக்கே தாரைவார்க்கப்பட்டு வந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் காங்கிரஸ் பலமுறை இங்கு வெற்றி பெற்றுள்ளது.  அதனால் இது காங்கிரசுக்கு சாதகமான தொகுதியாக கருதப்படுகிறது. 

இந்த மக்களவைத் தேர்தலை பொருத்தவரையிலும் திமுக கூட்டணியில் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்பதால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கடுமையான போட்டி நிலவியது. அவர்களில் பிரவீன் சக்கரவர்த்தி, மணிசங்கர் அய்யர்,  திருநாவுக்கரசர், செல்லக்குமார் என காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய பிரபலங்கள் இந்த தொகுதியை தங்களுக்கே வழங்க வேண்டும் என தலைமையை வலியுறுத்தி வந்தனர்.

இவர்களில் பிரவீன் சக்கரவர்த்தி தான் காங்கிரஸின் முதல் சாய்ஸாக இருந்தது. ஆனால் திமுக தரப்பில் மிக உறுதியாக அவரை தமிழ்நாட்டில் எங்கும் நிறுத்தக்கூடாது என்று கூறப்பட்டதாம். பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஆடியோ வெளியிட்டதில் இவரின் பங்குதான் மிக அதிகம் என்று கிடைத்திருக்கும் தகவல்களால், திமுக இவரை தமிழ்நாட்டில் எங்கும் களமிறக்கக்கூடாது என்று கறாராக கூறி விட்டதாம்.  

இந்த நிலையில் வேறு யாருக்கு கொடுத்தாலும் அதனால் கட்சிக்குள் பொல்லாப்பு வரும் என்பதால்,  கடலூர் தொகுதிக்கு சீட் கேட்டிருந்த தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியான வழக்கறிஞர் சுதாவை வேட்பாளராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ். அவசர அவசரமாக சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 10 மணிக்கு மயிலாடுதுறை வந்த சுதா அதேசூட்டில் வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.

கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்த காளியம்மாள்
கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்த காளியம்மாள்

காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்புக்கு வெகு நாட்களுக்கு முன்னேயே அதிமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது.  மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜின் மகன் பாபு வேட்பாளராக போட்டியிடுகிறார்.  அவருக்கு முன்னதாகவே கட்சியின் ஸ்டார் பேச்சாளர் காளியம்மாள் தான் வேட்பாளர் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துவிட்டது. தனது பிறந்த ஊரான இந்த தொகுதியில் பம்பரமாக சுற்றி வருகிறார் காளியம்மாள்.  அவரின் வெகு இயல்பான பேச்சு வாக்காளர்களை கவர்ந்திருக்கிறது. ஆனாலும் அது நாம் தமிழர்  கட்சியின் தம்பிகளைதாண்டி பிறரின் வாக்குகளையும் ஈர்க்குமா என்பது ஐயம் தான்.

அதேபோல அதிமுக வேட்பாளரும் தொகுதியை ஒரு சுற்று சுற்றி முடித்துவிட்டார்.  செயல்வீரர்கள் கூட்டமும் நடந்து விட்டது. இதனால் தொகுதி முழுவதும் வேட்பாளர் நன்கு அறிமுகம் ஆகிவிட்டார். ஆனாலும் கூட்டணி பலம் இல்லை என்கிற எண்ணம் அதிமுகவினர் மத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. சுமார் 54 பேர் விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில் அனைவருமே தங்களுக்கு சீட் வேண்டாம் என்று தலைமையிடம் கூறி விட்டதாக கூறப்படுகிறது அதனால் தான் மாவட்ட செயலாளரின் மகனையே அதிமுக வேட்பாளராக அறிவித்தது.

அதிமுக வேட்பாளர் பாபு மனு தாக்கல்
அதிமுக வேட்பாளர் பாபு மனு தாக்கல்

பாஜக கூட்டணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் நன்கு அறிமுகமானவர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள கட்சிக்காரர்களுக்கு அவரை நன்றாகவே தெரியும். ஆனால் வாக்காளர்களுக்கு அவரை அவ்வளவாக தெரியாது. அதனால் வாக்காளர்களிடம் அவரைக் கொண்டு சேர்க்கும் வேலையில் பாஜக கூட்டணி இறங்கியுள்ளது.  மயிலாடுதுறை தொகுதியை பொறுத்தவரை வன்னியர் வாக்கு வங்கி அதிகம் உள்ளது. அத்துடன் தற்போது பாஜகவும் வளர்ந்துள்ளதால் பாமக நம்பிக்கையுடன் இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா கட்சியினரிடையே வெகு நன்றாக அறிமுகம் ஆகியுள்ளார். ஆனாலும் மயிலாடுதுறை மக்களைப் பொறுத்தவரை அவர் புதியவர். சென்னை கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவராக இருந்தாலும் தங்களது பூர்வீகம் மயிலாடுதுறை அருகே உள்ள மறையூர்தான் என்று சொல்லும் சுதா, அதற்கு ஆதாரமாக அந்த ஊரில் இருந்து சிலரை வேட்புமனு தாக்கலின்போது  வரவழைத்திருந்தார்.

மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். மற்றவர்கள் வெவ்வேறு நபர்களை சிபாரிசு செய்த நிலையில் சுதாவை அவ்வளவு எளிதாக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவராக அவர் இருப்பதால் இனிமேல் தான் மக்களிடம் அவரைக் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் காங்கிரசுக்கு இருக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு வலுவான கட்டமைப்பு காங்கிரஸிடம் இல்லை. 

அதனால் அவர்களை தூக்கி சுமக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது.  செயல்வீரர்கள் கூட்டங்கள் இனிமேல்தான் நடத்தப்பட வேண்டும். வேட்பாளர் அறிமுக கூட்டங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாக நடத்த வேண்டும். திமுகவினர் தேர்தல் வேலைகளில் இன்னும் வேகம் காட்டவில்லை. வேட்பாளர் அறிவிப்பிற்கு ஆன காலதாமதத்தால் பணிகள் தொடங்குவதிலும் சுணக்கம் காணப்படுகிறது. மற்ற மூன்று வேட்பாளர்களும் தொகுதியை பம்பரமாக சுற்றி வரும் நிலையில் ஆரம்ப கட்ட வேலைகளையே காங்கிரஸ் வேட்பாளர் இனிமேல் தான் தொடங்க வேண்டும். 

இன்னும் ஒரு வார காலம் கழித்து பார்த்தால்தான் தொகுதிக்குள் காங்கிரஸ் வேட்பாளருக்கு வரவேற்பும், ஆதரவும் எப்படி இருக்கிறது என்பதை கணிக்க முடியும். அதிலும் திமுகவினர் வேலை பார்க்கும் விதத்தை வைத்துத்தான் காங்கிரஸ் கரைசேருமா என்பதை முடிவு செய்ய இயலும்.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in