கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

ஸ்ரீபெரும்புதூரில் வாக்கு சேகரிக்கும் ஜி.கே வாசன்
ஸ்ரீபெரும்புதூரில் வாக்கு சேகரிக்கும் ஜி.கே வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் வாசன்
கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் வாசன்

காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைவராக இருந்த கருப்பையா மூப்பனார் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி.கே.வாசன் அரசியலுக்கு வந்தார். காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனது தந்தை நடத்திவந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சிறிது நாட்கள் நடத்திய வாசன், பின்னர் காங்கிரஸில் அதனை இணைத்தார். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட பாஜகவுடன் தற்போது அவர் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார்.  தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் தமாகா சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு ஜி.கே.வாசன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேணுகோபாலுக்கு வாக்குகள் கேட்டு நேற்று அவர் அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

அருகில் இருந்தவர்கள் அதனை சுட்டிக்காட்டியதும் வேட்பாளரின் கையை நகர்த்த சொன்னேன் என்று சுதாரித்த வாசன், சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று மீண்டும் திருத்தி சொன்னார்.  இத்தனைக்கும் அவரது அருகில் நின்ற வேட்பாளரின் கையில் சைக்கிள் சின்னமும் கூடவே இருந்தது.  என்னதான் இருந்தாலும் பழசை மறக்காத தலைவர்  என்று தொண்டர்கள் கிண்டலடித்தனர்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இதே போலத்தான் கடலூர் தொகுதியிலும் சம்பவம் நடந்தது. அந்தத் தொகுதி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டுள்ளது தேமுதிக சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  அவருக்கு முரசு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக வேட்பாளருக்காக நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தேமுதிக வேட்பாளருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

அருகில் இருந்தவர்கள் இதனை சுட்டிக்காட்டியதும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இத்தனைக்கும் மதிமுக பம்பரம் சின்னத்தை கேட்ட நிலையில் அவர்களுக்குக் கூட அந்த சின்னம் வழங்கப்படவில்லை.  களத்திலேயே இல்லாத பம்பரம் சின்னத்திற்கு சி.வி. சண்முகம் வாக்கு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in