தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

வேட்புமனு தாக்கல் செய்யும் திருமாவளவன்
வேட்புமனு தாக்கல் செய்யும் திருமாவளவன்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன். கடந்தமுறையே தட்டுத் தடுமாறித்தான் கரை ஏறினார். இப்போது தொகுதிக்குள் பரவலாக அதிருப்தி அலையடிக்கும் சூழலில் வெற்றி அவருக்கு கைகூடுமா என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்துள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

2019-க்கு முன்பே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் திருமாவளவனுக்கு உண்டு என்றாலும் அப்போது தொகுதியில் இருக்கும் இதர சாதியினரின் வாக்குகளால் அவர் தோற்கடிக் கப்பட்டார். இருந்தாலும் கடந்த முறை அவர் சிதம்பரத்தில் மீண்டும் நின்றார். தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றதால் அதன் தாக்கத்தில் சிதம்பரத்திலும் திக்கித் திணறி திருமாவும் வென்றார்.

அப்படி வெற்றி பெற்ற அவர் சிதம்பரம் தொகுதியை தனக்கு மிகவும் நெருக்கமாக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், கட்சியின் தலைவர் என்பதாலும், மேல்மட்ட அரசியல் செய்யும் காரணத்தாலும் அவர் கடந்த ஐந்தாண்டு காலத்தில் சிதம்பரம் தொகுதிக்குள் பெரிதாக தலைகாட்டவில்லை. பெரிய திட்டங்களை தொகுதிக்கு அவர் கொண்டுவந்ததாகவோ தொகுதி பிரச்சினைகளுக்காக போராடியதாகவோ செய்திகள் இல்லை.

அதனால் தங்கள் தொகுதியின் எம்பி திருமாவளவன் தான் என்பதையே சிதம்பரம் மக்கள் மறந்து விட்டனர். இந்த நிலையில், மீண்டும் அவர் சிதம்பரத்தில் நிற்கிறார். கரூர் ஜோதிமணி போலவோ, சிவகங்கை கார்த்தி சிதம்பரம் போலவோ திமுகவினருடன் திருமா எந்த முரண்பாடும் கொள்ளவில்லை. அனைவரிடமும் இணக்கமாகவே இருக்கிறார். ஆனாலும் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி காரணமாக, “இம்முறை சிதம்பரத்தை விசிகவுக்கு கொடுக்க வேண்டாம்” என்று தலைமையிடம் திமுகவினர் மன்றாடினார்கள். அவர்களின் மன்றாடல் எடுபடவில்லை. பிடிவாதமாக சிதம்பரத்தைக் கேட்டு வாங்கிவிட்டார் திருமா.

இதனால் அதிருப்தியில் இருக்கும் திமுகவினர் திருமாவுக்கு உள்ளார்ந்து தேர்தல் பணி செய்வார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்துகொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டிய, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  வெ.கணேசன், சிவசங்கர் ஆகியோர் தொகுதி பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் திருமா என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்பதை எடுத்து அடுக்கினார்கள். இதைக்கேட்டு திமுகவினருக்கு திருமா மீதான கோபம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனாலும் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி இன்னும் அப்படியே தொடர்கிறது.

முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன்
முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன்

சென்றமுறை 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திருமா வென்றார்.  கடந்த ஐந்தாண்டுகளில் சிதம்பரம் தொகுதியை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்திற்குள் பெரிதாக ஜாதிக் கலவரங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் விசிகவுக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்துள்ளது.

இதை மேற்கோள்காட்டும் விசிகவினர், “திருமாவளவன் எம்பி ஆனால் சிதம்பரம் தொகுதிக்குள் சாதி கலவரங்கள் தலைவிரித்தாடும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனால் தான் கடந்த முறை சொற்ப ஓட்டில் திருமா ஜெயிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அப்படி எந்த சாதி கலவரமும் சிதம்பரம் தொகுதிக்குள் நடக்கவில்லை. இதை உணர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளில் இருக்கும் வன்னியர்களும் இம்முறை திருமாவுக்கு வாக்களிக்க தயாராய் இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சிவசங்கருக்கும் திருமாவை வெற்றிபெறவைக்க வேண்டிய பொறுப்பை ஸ்டாலின் ஒப்படைத்திருக்கிறார். மூவருமே திருமாவுக்காக இப்போது களத்தில் நிற்கிறார்கள். அதனால் திருமாவைவிட அதிருப்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இப்போது இவர்கள் தலையில் விழுந்திருக்கிறது.

பாஜக கூட்டணியில் அதிமுகவும் இருந்திருந்தால் இம்முறை திருமா கரைசேருவது கடவுள் புண்ணியம் என்று இப்போதே சொல்லி இருக்க முடியும். அப்படி இல்லாமல், பாஜகவைவிட்டு அதிமுக விலகிவிட்டது. இப்போது தன்னை எதிர்த்து இரண்டு கூட்டணிகள் நிற்பதால் சிதம்பரத்தை மீண்டும் திருமா தக்கவைப்பார் என்றே தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...  
ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in