அரசியலை விட்டு விலகவேண்டும் என மிரட்டுகிறார்கள்... அமர்பிரசாத் ரெட்டி பகீர் குற்றச்சாட்டு!

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

அரசியலை விட்டு விலக வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தம்மை மிரட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இந்த வீடு முன்பாக அனுமதி இல்லாமல் பிரம்மாண்ட கொடி கம்பம் நிறுவப்பட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கடந்த அக்டோபர் 20-ந் தேதி இரவு பாஜகவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பிரச்சினை உருவானது. இதனால் போலீசார் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற முயற்சித்தனர்.

அண்ணாமலை வீடு முன்பாக அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த இந்த கொடி கம்பத்தை போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியபோது பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டி மீது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் போது தமிழ்நாடு அரசின் விளம்பர பதாகைகளை சேதப்படுத்தி பிரதமர் மோடி படம் ஒட்டியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது, தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது அரசு அதிகாரிகளுடன் மோதியது உள்ளிட்ட பல வழக்குகளில் அடுத்தடுத்து அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

ஆழ்வார்குறிச்சி வழக்குக்காக சென்னையில் இருந்து அரசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அமர் பிரசாத் ரெட்டி. இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் இதர வழக்குகளில் ஜாமீன் கிடைக்காத நிலையில் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலையின் நண்பர் அமர்பிரசாத் ரெட்டி திடீர் கைது!
அண்ணாமலையின் நண்பர் அமர்பிரசாத் ரெட்டி திடீர் கைது!

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமக்கு ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தம்மை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர். அண்ணாமலையின் பாதயாத்திரையில் பங்கேற்பதைத் தடுக்கவே தன்னை கைது செய்துள்ளனர். புழல் சிறையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் போதுமான அளவு செய்யப்படவில்லை. 500 கைதிகளுக்கு ஒரு சமையல் அறை என இருக்க வேண்டும். ஆனால் 2910 கைதிகளுக்கு ஒரு சமையல் அறைதான் உள்ளது என்றும் அந்த ஜாமீன் மனுவில் குற்றம்சாட்டியிருந்தார் அமர் பிரசாத் ரெட்டி.

இந்த ஜாமீன் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in