சசிகலாவை நீக்கியது செல்லும்! உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்

சசிகலா- ஓபிஎஸ்
சசிகலா- ஓபிஎஸ்

கட்சியின் வளர்ச்சிக்காக விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது என அதிமுக தரப்பிலும், சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து, சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2016ம் ஆண்டு இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான நோட்டீஸ் அனுப்பியது யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2016 மற்றும் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டங்களுக்கு தலைமை கழகம் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாக, அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், வேட்பாளருக்கான சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளதாகவும், தேர்தல் ஆணையமும் இதை அங்கீகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுகவின் சட்டவிதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது எனவும் வாதிட்டார்.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கடந்த ஆண்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது பொதுச்செயலாளராக தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in