கனமழை : மிதக்குது சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ அதிகரிக்குமா? அலறும் பொதுமக்கள்!

கனமழை : மிதக்குது சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ அதிகரிக்குமா? அலறும் பொதுமக்கள்!

நாளை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழைக்கே வேளச்சேரி, கிண்டி நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையிலும், சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அலுவலகங்களும் செல்பவர்களும், பள்ளிக்கு புறப்பட்ட மாணவர்களும் காலை நேர பரபரப்பில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இந்த முறை தண்ணீர் எந்த பகுதியிலும் தேங்கி நிற்காது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி சென்னை மாநகர மேயர், ஆணையர் என அனைவரும் கூறினர்.

சில மணி நேரம் பெய்த மழைக்கே சென்னை வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி, குளம் போல காட்சியளிக்கிறது. இன்னமும் சில இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், சென்னை நகரின் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகவும், வெள்ளக்காடாகவும் காட்சியளிக்க துவங்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், டெங்கு பரவல் குறித்தும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஏற்கெனவே டெங்கு பரவல் அதிகரித்து வருவதும், டெங்கு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், இதனால் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், மழைக்கால நோய்கள் வரும் அபாயம் அதிகம் இருப்பதாலும் பொதுமக்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டுமென கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை தமிழகத்திற்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

இன்று 11 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை!

குட்நியூஸ்: இன்று முதல் 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in