லக்னோவில் உள்ள ஐஐடி வளாகத்திற்குள் மாணவி ஒருவரை, அடையாளம் தெரியாத 3 பேர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. ஐஐடியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு நண்பருடன் தனது விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஐஐடி வளாகத்தில் உள்ள கோயில் அருகே நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், மாணவியை அங்கிருந்த மறைவான பகுதிக்கு இழுத்து சென்று, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது, மாணவியை முத்தமிட்டு மானபங்கப்படுத்திய மூவரும், அவரது உடைகளையும் கிழித்தெறிந்ததோடு அதனை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் போலீஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு இடையே, சுவர் ஒன்றை எழுப்பி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக வளாகத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் எனவும், மாணவர்களின் நடமாட்டத்தை இரவு 10 மணி முதல் 5 மணி வரை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் பாலியல் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.