ம.பியில் காங்கிரஸ் ஆட்சியைத் திருடிய கட்சி தான் பாஜக: ராகுல் காந்தி கடும் தாக்கு!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை விலைபேசி தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியைத் திருடியது பாஜக என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில்  பாஜகவை வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், 2020-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் பாஜகவுக்கு தாவியதால் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.

அங்கு வரும் 17-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல்  நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக சார்பில் தீவிர களப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனையொட்டி நீமுச் பகுதியில் திங்கள்கிழமை நடந்த  தேர்தல்  பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 100 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பாஜக பெரும் தொழிலதிபர்களுடன் கூட்டணி வைத்து மாநிலத்தைக் கொள்ளையடித்து வருகிறது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் சுரண்டப்படுகின்றனர். மத்தியப் பிரதேசம் நாட்டின் ஊழலில் தலைநகரமாகிவிட்டது. 

மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன், இடைத்தரகர்களிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்க பேரம் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் எவ்வித அச்சவுணர்வும் இன்றி வீடியோ அழைப்பில் அமைச்சரின் மகன் பேரம் பேசுகிறார்.

இந்த வீடியோவை மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். இந்த பேரம் தொடர்பாக நமது பிரதமர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை மத்திய அமைச்சர் வீட்டுக்கும், அவரது மகன் வீட்டுக்கும் செல்லுமா?

ராகுல் பிரச்சாரம்
ராகுல் பிரச்சாரம்

இங்குள்ள பாஜக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்திருந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். பாஜக ஆட்சியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

கடந்த தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், எம்எல்ஏக்களை விலைபேசி தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பாஜக திருடியது. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) எண்ணிக்கை குறித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, இந்துத்துவத்தில் சாதிகள் இல்லை என்றும் வறுமை மட்டுமே ஒரே சாதி என்றும் பேசத் தொடங்கியுள்ளார். இதற்கு முன்பு வரை அவா்கள் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறி வாக்குக் கேட்டு வந்தனர் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது" என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.


இதையும் வாசிக்கலாமே...

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in