பூங்கொத்தில் பூவே இல்லையே? - பிரியங்காவின் பிரச்சாரத்தில் கலகலப்பு - வைரல் வீடியோ!

பூங்கொத்தில் பூவே இல்லையே? - பிரியங்காவின் பிரச்சாரத்தில் கலகலப்பு - வைரல் வீடியோ!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரச்சார மேடையில், பூவே இல்லாமல் தலைவர் ஒருவர் பூங்கொத்து கொடுத்ததை பார்த்து பிரியங்கா காந்தி வாய்விட்டுச் சிரித்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

நாட்டில் உள்ள 5 மாநில தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுவதால் இந்த தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் நிச்சயம் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்தியாக வேண்டும் என்று திட்டமிட்டுக் களமிறங்குகிறது.

தேர்தலுக்கு இன்னும் நாட்களே இருக்கும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இப்போது பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கலகல சம்பவம் நடந்துள்ளது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

நேற்று இந்தூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அங்கே வந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேவந்திர யாதவ் பிரியங்கா காந்திக்குப் பூங்கொத்தைக் கொடுத்தார். ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதில் ஒரு பூ கூட இல்லை. பூங்கொத்தை வாங்கிய பிரியங்கா காந்தி இதைக் கவனிக்கவும் தவறவில்லை. பூங்கொத்தில் ஒரு பூ கூட இல்லாததைப் பார்த்தவுடன் அவருக்குத் தன்னையும் மீறிச் சிரிப்பு வந்துவிட்டது.

நேற்றைய தினம் இந்தூரில் நடந்த பிரசாரத்தின் முழு நிகழ்வைக் காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் லைவில் ஒளிபரப்பினார்கள். இந்த நிகழ்வைப் பார்த்தோரும் இதைக் கவனிக்கத் தவறவில்லை. இதனால் இந்த குறிப்பிட்ட சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில், மேடையில் இருந்த பிரியங்கா காந்தியை உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையாக வந்து வரவேற்றனர். அப்போது சிலர் அன்பளிப்புகளையும் வழங்கினர். அப்போது மேடை ஏறிய உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகி தேவேந்திர யாதவ், பூங்கொத்து போல இருக்கும் ஒன்றைப் பிரியங்கா காந்தியிடம் கொடுக்கிறார். ஆனால், அதில் பூ எதுவும் இல்லை. இதனால் ஏற்கனவே மேடையில் இருந்த மற்ற தலைவர்கள் சற்று டென்ஷன் ஆனார்கள். இருப்பினும், பிரியங்கா காந்தி சிரிக்க ஆரம்பித்தால், மேடையில் கலகலப்பு ஏற்பட்டது.

இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி ஆளும் பாஜகவை சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசுகையில், "தீபாவளிக்கு முன் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது, இதனால் குடும்பத் தலைவிகள் கலக்கத்தில் உள்ளனர். தேர்தல் நடக்கும் போது மட்டுமே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு முயல்கிறது.

மற்றபடி விலைவாசி உயர்வு குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1,400 ஆக ஆக இருந்தது தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பு விலையைக் குறைத்தனர். ஆனால், மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜகவுக்குப் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை எங்கே காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த 2018 தேர்தலிலும் கூட காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியையும் பிடித்தது. இருப்பினும், அந்த ஆட்சி 2 ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தது. ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கி, அவரது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய, அப்போதிருந்த கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in