
மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சத்தீஸ்கர் முதல்கட்டத் தேர்தலில் நக்சலைட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலில் 174 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 8.57 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக 40 தொகுதிகளிலும் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல்வர் சோரம்தங்கா அய்ஸ்வால் வடக்கு 2 தொகுதியில் காலையில் வாக்களிக்க வந்தார். வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியவில்லை. கோளாறு சரிசெய்யப்பட்ட பின் அவர் வாக்களித்தார்.
தேர்தலில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கும் பலமுனைப் போட்டி நடக்கிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. தேர்தல் அமைதியாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் நக்சலைட் பாதிப்பு உள்ள பகுதிகளில் நேற்று 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வருகிற 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது.
சுக்மா மாவட்டத்தில் உள்ள தொண்டமார்க் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர் லேசான காயம் அடைந்தார். மின்பா என்ற இடத்தில் நக்சலைட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் காயமடைந்தனர்.
மிசோரமில் 75 சதவீத வாக்குகளும் சத்தீஸ்கரில் 70 சதவீத வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்