
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு நேற்று திடீரென மூச்சு திணறலுடன் நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஹெச்.ராஜாவுக்கு இன்று காலையில் இருதய சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். ரத்த அடைப்புகளை சரி செய்து ஸ்டண்ட் வைக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரை குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஹெச்.ராஜா அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஹெச்.ராஜா உள்ளதால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட இயலாது என தெரிவித்து கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்.ராஜாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.