இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்... அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்... அதிர்ச்சி தகவல்!
Updated on
2 min read

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250 பாலஸ்தீனிய குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரமான தாக்குதலை தொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஹமாசை நசுக்கி ஒழிக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். பின்னர் காசா மீது மிக கடுமையான தாக்குதல் இஸ்ரேலால் தொடுக்கப்பட்டது. இதனால் காசா நகரில் கட்டட இடிபாடுகளில் ஏராளமான சடலங்கள் கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் விமானங்களின் குண்டு மழையில் சிக்கி ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

பெண்கள், குழந்தைகள் என 150 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் போராளிகள் காசா நகரில் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரையும் மீட்கும் வரையிலும் போரின் தீவிரம் குறையாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளிடமிருந்து இஸ்ரேல் பணய கைதிகளை மீட்பதற்கும், மத்தியஸ்தம் செய்வதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் உலக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் குழந்தைகள் இருவரை, நேற்று இரவு ஹமாஸ் அமைப்பினர் காசா நகர் எல்லையில் இருந்து இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்த நிலையில், அந்த காட்சி சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஹமாஸ் அமைப்பினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு ஹமாஸ் அமைப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளது மட்டுமல்லாது 2 இஸ்ரேலிய குழந்தைகளையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

பணய கைதிகளை போராளிகளிடமிருந்து மீட்டுவிட்டால் ஓரளவிற்கு பிரச்சினையை கட்டுப்படுத்தலாம் என உலக மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் ஐ.நா. போன்றவை கருதும் நிலையில்,அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காசா நகரத்தில் கட்டிட இடிபாடுகளிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் எடுக்கப்படுவதாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன அரசின் அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் 4 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளிடையே கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரத்தில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in