
தேசிய மலரான தாமரையை பாரதிய ஜனதா கட்சிக்கு சின்னமாக ஒதுக்கியதில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரருக்கு அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடும் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்துள்ளது.
தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. இது நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்தும் செயல் எனக் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனனே எனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கோரி இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்க எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று, விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும், “இது விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகத் தெரிகிறது. சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்காவிட்டால், கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும்” எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்