ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடமில்லாதது அபத்தம் - எலான் மஸ்க் திடீர் ஆதரவு!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடமில்லாதது அபத்தமானது என உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியா பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சீனா உள்ளிட்ட சில நாடுகள் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த நிலையில், ஐ.நா அமைப்பின் பாதுகாப்புச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ், “பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்ரிக்காவுக்கு இன்னும் ஒரு நிரந்தர உறுப்பினர் இல்லை என்பதை நாம் எப்படி ஏற்க முடியும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் லச்சினை
ஐநா பாதுகாப்பு கவுன்சில் லச்சினை

சர்வதேச அமைப்புகள், இன்றைய உலகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இருக்கக்கூடாது. செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஐ.நா உச்சி மாநாடானது, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிப்பது மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இதற்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், அதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அதிக அதிகாரம் வைத்துள்ளவர்கள், அதனை விட்டுத் தர விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது. ஆப்பிரிக்காவுக்கும் நிரந்தரம் இடம் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். எலான் மஸ்க் இந்தியாவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ள இந்த சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in