முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்... இன்று கூடுகிறது அமைச்சரவை... என்னென்ன முக்கிய முடிவுகள்?

முதல்வர் மு க ஸ்டாலின்
முதல்வர் மு க ஸ்டாலின்

பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று  நடைபெறுகிறது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம்

பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில் அதைப் பின்பற்றி  தமிழக அரசும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது. அதற்காக  தமிழக சட்டப்பேரவையின் 2024 ம் ஆண்டுக்கான முதல் கூட்டம்  பிப்ரவரி மாதம் 2-வது வாரம் கூட்டப்படுகிறது. 

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து, தொழில் அமைப்புகள், பல்வேறு சங்கங்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இதில், தமிழக சட்டப்பேரவை ஆண்டு கூட்டத்தை நடத்துவது, தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான செயல்களை செய்து வரும் ஆளுநரை சட்டப்பேரவை கூட்டத்திற்கு அழைப்பதா வேண்டாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ஆளுநர் அழைக்கப்பட்டால் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், தமிழக அரசுத் துறைகளில் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவை  தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, வரும் 28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அவர் பிப்ரவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்புகிறார். இந்த சூழலில் மாநில அரசின் நிர்வாகம், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in