நவீன நீர்வழித் திட்டத்தின் நாயகன்... காலமானார் ஏ.சி.காமராஜ்

பொறியாளர் ஏ.சி காமராஜ்
பொறியாளர் ஏ.சி காமராஜ்

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி.காமராஜ் முதுமை காரணமாக தனது 90 வது வயதில்  இன்று காலமானார்.

நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதன் மூலம் நதிகளை எளிதாக இணைக்கலாம் என்கிற திட்டத்தை முன்வைத்து அதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்தறிந்து வெளியிட்டவர் பேராசிரியர் ஏ.சி.காமராஜ். நதிகள் இணைப்புக்கான இந்திய அரசின் உயர் மட்டக் குழுவிலும் இவர் உறுப்பினராக இருந்தார்.

பாலாறு, செய்யாறு, பொன்னையாறு, காவிரி, மேல் ஓடை, அமராவதி, சண்முக நதி, பாம்பாறு, வரட்டாறு, நல்லதங்கல் ஓடை, குடகனாறு, வைகை, காயுண்டன், குண்டாறு, அர்ஜூனா, தாமிரபரணி, சித்தாறு ஆகிய 17 நதிகளை நீர்வழிப் பாதை மூலம் இணைக்க முடியும் என்ற முன் வரைவை  இவர் தயாரித்துள்ளார்.

கோதாவரி ஆற்றிலிருந்து மட்டுமே ஆண்டுக்கு 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலுக்கு செல்கிறது. கோதாவரி வெள்ள நீரை முறையாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்பது இவரின் திட்டம் ஆகும்.

கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அவற்றின் கிளை நதிகளை பிணைத்து 4,500 கி.மீ. நீளத்துக்கு இமயமலை நீர்வழிச் சாலையை உருவாக்க முடியும். தெற்கு கங்கை, மகாநதி, நர்மதை, தபதி மற்றும் அவற்றின் கிளை நதிகளை பிணைத்து 5,750 கி.மீ. தொலைவுக்கு மத்திய நீர்வழிச் சாலை அமைக்கலாம் என்றும் இவரது ஆய்வு அறிக்கை கூறுகின்றது. 

அதேபோல கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட தென்னக நதிகளை இணைத்து தெற்கு நீர்வழிச்சாலையை 4,650 கி.மீ. தொலைவுக்கு உருவாக்கலாம். இதுபோன்ற நீர்வழிப் பாதையால் வெள்ள சேதங்கள் குறையும். அனைத்து மக்களுக்கும் ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். நாடு முழுவதும் 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதியை பெறும்.

நீர்வழிப் பாதையில் நிர்மாணிக்கப்படும் நீர் மின் திட்டங்களால் 60 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சுமார் 20 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மிகப்பெரிய திட்டத்தை காமராஜ் முன்வைத்துள்ளார்.

இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு தனது ஆய்வு அறிக்கைகளை முன்வைத்த பொறியாளர் ஏ.சி காமராஜ் உடல் நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக இன்று  காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in