
தலைநகர் டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து வருவதையடுத்து, காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிறப்பு பிரிவை தொடங்க அம்மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதாலும், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை காரணமாகவும், தலைநகர் டெல்லியில், காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, டெல்லி அரசு பட்டாசுகள் வெடிக்கவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள போதும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் காற்று மாசு மேலும் அதிகரித்து, அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் தலைமையில் துரை சார்ந்த கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத்தில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, தற்போது விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் கன ரக வாகனங்களை தவிர பிற வாகனங்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும் பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடரும், உ.பி, ஹரியாணா மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுக்கு தெரியாமல் டெல்லிக்குள் பட்டாசுகளை எடுத்து வந்திருக்க முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் கோபால் ராய், இது திட்டமிட்டே நடத்தப்பட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே மாநிலத்தின் பிரதான மருத்துவமனைகளில் ஒன்றான ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் காற்று மாசு தொடர்பான உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் அஜய் சுக்லா கூறுகையில், கடந்த சில நாட்களில் காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல், நுரையீரல் பிரச்சினைகள், தோல் வியாதிகள் உள்ளிட்டவற்றுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் வகையில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை செயல்படும் சிறப்பு புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!
காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!
உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!
அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!