மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்
மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்

இஸ்ரேலின் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் - ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் மலேசியா!

ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஹமாஸிற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் அமெரிக்காவின் சட்ட வரைவிற்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார். நீண்ட காலமாக பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு பரவலாக இருக்கும் மலேசியா போன்ற ஒரு நாட்டில் இது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கு தடை விதிக்க கடந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்ததை அடுத்து, ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மலேசிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அன்வர் இப்ராஹிமிடம் கேட்டிருந்தார்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினர்
ஹமாஸ் ஆயுதக் குழுவினர்

"இது உட்பட எந்த அச்சுறுத்தல்களையும் நான் ஏற்கமாட்டேன். இந்த நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் செல்லுபடியாகாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாகிய நாங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் முடிவுகளை மட்டுமே அங்கீகரிக்கிறோம்" என்று அன்வர் கூறினார்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடான மலேசியா, பாலஸ்தீனத்துக்கு நீண்ட காலமாக ஆதரவளித்து வருகிறது. இஸ்ரேலை மலேசியா இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கவில்லை மற்றும் இரு நாடுகள் தீர்வு (Two State Solution) நிறைவேற்றப்படும் வரை அத்தகைய அங்கீகாரம் இஸ்ரேலுக்கு வழங்கப்படாது என்று மலேசியா தெரிவித்துள்ளது. மேலும், அதன் தலைநகரான கோலாலம்பூரில் பாலஸ்தீன பிரச்சினைகள் தொடர்பான மாநாடுகள் அடிக்கடி நடத்தப்படும்.

76 வயதான அன்வர் தனது பல்கலைக்கழக நாட்களில் இருந்தே பாலஸ்தீனர்களுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அன்வரின் ஆலோசகராக இருந்த அரசியல் போட்டியாளர் மஹதீர் முகமத், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வலுவான கருத்துகளை வெளியிட்டார். இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து மற்ற நாடுகள் அமைதி காப்பதாகவும் அவர்கள் மீதான தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

அன்வரின் போட்டியாளரான மஹதீர் இப்படி பேசும்போது, மலேசியாவில் மதப் பழமைவாதம் தலைதூக்கி வரும் இந்த நேரத்தில், பிரதமர் அன்வர் வலுவான கருத்தைக் கொண்டிருக்காவிட்டால் அவருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சிந்தனைக் குழு (Think Tank) ISEAS-Yusof Ishak நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜூலியா லாவ் மற்றும் பிரான்சிஸ் ஹட்சின்சன் ஆகியோர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். எனவே அன்வர் நடந்து வரும் இஸ்ரேல்-காஸா போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்பு எடுத்ததை விட கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதாகத் தெரிகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவை கண்டிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் அழுத்தத்தை அன்வர் இப்ராஹிம் நிராகரித்தார். ஹமாஸ் ஆயுதக்குழுவானது காசாவைச் சேர்ந்த மக்களால் அந்தப்பகுதியை ஆள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், காசா பகுதியில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை உலகில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் என்று கண்டித்தார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை முடிவுக்கு கொண்டுவர முயன்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுடன் (ANC) ஹமாஸ் ஆயுதக்குழுவை ஒப்பிட்டு அவர் பேசினார். "1991 முதல் 1997 வரை நெல்சன் மண்டேலாவையும் பயங்கரவாதி என்றே மேற்குலகம் என சித்தரித்தது. ஆனால் மலேசிய அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவளித்தனர்" என அன்வர் கூறினார்.

மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்
மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசியாவில் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மலேசிய ஊடகங்கள் பாலஸ்தீன மக்களின் கவலைகள் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் பாலஸ்தீனர்களின் நிலம், செல்வம் மற்றும் சுயமரியாதை ஆகியவை தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறது. அந்த மக்களின் உரிமைகளை மலேசிய ஊடகங்கள் அங்கீகரிக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

காசாவில் 4,100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 10,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலில் பெரும்பாலும் பொதுமக்களான 1,400 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in