அதிர்ச்சி...கால் சென்டர் நடத்தி பல கோடி மோசடி: ஆசிரமம் பெயரில் சுருட்டிய 2 பேர் கைது!

கைது செய்யப்பட்ட கோபி, கண்ணன்
கைது செய்யப்பட்ட கோபி, கண்ணன்

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்படுள்ளனர். அவர்கள் ஆசிரமம் என்ற பெயரில் கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி ரங்கநாதன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(41). இவர் சேப்பாக்கம் பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முத்துவை செல்போனில் தொடர்பு கொணட அடையாளம் தெரியாத ஒரு பெண்மணி, தாங்கள் அனாதை ஆசிரமம் நடத்தி வருவதாகவும் அதில் வயதானவர்கள், ஆதரவற்ற பெண்கள், உடல் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு முத்து பின்னர் பார்க்கலாம் என கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து ஜனவரி 12-ம் தேதி மீண்டும் முத்துவை தொடர்பு கொண்ட அதே பெண் பெரம்பூர் பட்டேல் சாலையில் அன்னை தெரசா ஓல்ட் ஏஜ் என்ற அனாதை ஆசிரமத்தில் இருந்து பேசுவதாகவும் தங்களது இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பதால் அவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டதுடன், ஏற்கெனவே இது குறித்து உங்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களது அனாதை ஆசிரமம் மற்றும் அங்குள்ள ஆதரவற்றோர் குறித்த புகைப்படங்களுடன் தங்களுடைய ஜி.பே எண்ணையும் அனுப்பி பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதனை நம்பி முத்து தாங்கள் நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ள கூறினார். இதன் பேரில் ஜனவரி 12-ம் தேதி சுதா ஆனந்த் என்பவர், தான் அன்னை தெரசா ஆசிரமத்தில் இருந்து வருவதாக கூறி முத்துவிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பெற்றுச் சென்றார். இருப்பினும் வந்த நபர் மீது சந்தேகமடைந்த முத்து, அந்த நபர் கூறிய விலாசத்தில் உள்ள ஆசிரமத்தை நேரில் பார்க்க சென்றுள்ளார்.

அப்போது அந்த இடத்தில் ஆசிரமத்தின் பெயரில் கால் சென்டர் இயங்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த கால் சென்டரில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்வதும், அவர்கள் ஒவ்வொருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு இதே போன்று பலரிடம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்து பணம் சுருட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்னை தெரசா டிரஸ்ட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு செம்பியம் காவல் நிலையத்தில் முத்து புகார் அளித்தார்.

கைது செய்யப்பட்ட கோபி
கைது செய்யப்பட்ட கோபி

இதன் பேரில் போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளி கோபி என்பவரை நேற்று கொடைக்கானலிலும், மற்றொரு குற்றவாளியான கண்ணன் என்பவரை எண்ணூரில் வைத்தும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக ஆதரவற்றோர் இல்லம் பெயரில் பொதுமக்களிடம் இருந்து பல கோடி‌ ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் பலர் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in