சோகம்... திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை!

ஜெகப்பிரியா
ஜெகப்பிரியா

சேலம் அருகே திருமணமான 30 நாளில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். ஐ.டி துறையில் பணியாற்றும் இவருக்கும், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெகப்பிரியா (22) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி ஜெகப்பிரியா தனது கணவர் வீட்டில் இருந்தபோது, வயிற்று வலியால் துடித்துள்ளார்.

விஷம்
விஷம்

இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். தனக்கு வயிற்று வலியும், வாந்தியும் வருவதாக ஜெகப்பிரியா கூறிய நிலையில், மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர். அப்போதும் வயிற்று வலி சரியாகத்தால் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜெகப்பிரியாவை அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து, அவரிடம் வயிற்று வலிக்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர்.

அப்போது, தான் கடந்த 3-ம் தேதி வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், இது கணவர் வீட்டினருக்குத் தெரியாது எனவும், ஜெகப்பிரியா தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக மருத்துவர்கள் அளித்த தகவலால், ஜெகப்பிரியா குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி ஜெகப்பிரியா உயிரிழந்தார். திருமணமாகி ஒரே மாதம் மட்டும் ஆன நிலையில் ஜெகப்பிரியா மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜெகப்பிரியா ஏன் விஷம் அருந்தினார் என்பது தொடர்பாக கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே ஜெகப்பிரியா திருமணம் வேண்டாம் என்று கூறியும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. புது மணப்பெண் 30 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in