
சட்டீஸ்கர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக சென்றுள்ள நிலையில், கன்கேர் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சட்டீஸ்கர் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அம்மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சட்டீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
ராஜ்னந்த்கான் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான, மா பம்லேஷ்வரி கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக டோன்கர்கார் சந்திரகிரி ஜெயின் ஆலயத்தில், வித்யா சாகர் மகராஜ் என்ற ஜெயின் துறவியை சந்தித்து ஆசிபெற்றார். இன்று மாலை துர்க் மாவட்டத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் அவர் பங்கேற்க உள்ளார். முன்னதாக அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இந்நிலையில் கன்கேர் மாவட்டத்தில் இன்று காலை, எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், நக்சல்களின் பதுங்கிடம் ஒன்று அழிக்கப்பட்டது. இதையடுத்து, நக்சல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக, போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையின் போது, நடைபெற்று வரும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அம்மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!