பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பட்டு சேலை விற்பனை செய்யும் கடையிலும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி தலைமையிலான போலீஸார்  பட்டு சேலை கடைக்கு சென்று வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீஸார் சேலை விற்பனை கடையின் மூன்று மாடிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

அதே போல், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டுக்கும் விரைந்த போலீஸார் வீட்டைச் சுற்றி அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கும் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது.

இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் போலியாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in