பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

பத்து தொகுதிகளுக்கு பாஜக குறி
பத்து தொகுதிகளுக்கு பாஜக குறிஓவியம்: வெங்கி

தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் இப்போதே தகிக்க ஆரம்பித்துவிட்டது. 39 தொகுதிகளும் இலக்கு என நிர்ணயித்துள்ளது திமுக கூட்டணி. அதிமுகவும் விட்டதைப் பிடிப்போம் என களமிறங்கிவிட்டது. இந்த சூழலில் குறைந்தது 10 தொகுதிகளில் வெற்றிபெற்றே தீருவது என்ற டார்கெட்டுடன் பாஜகவும் ரேஸில் குதித்துள்ளது. பாஜகவின் கணக்கு இருபெரும் திராவிட கட்சிகளின் செல்வாக்கை மீறி கைகூடுமா?

அதிமுக தங்களைவிட்டு விலகிப் போனதால் ஏற்பட்ட அதிர்ச்சியை எல்லாம் ஜீரணித்துவிட்ட பாஜக இப்போது புது உத்வேகத்துடன் களத்தில் நிற்கிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இப்போது தங்களுக்கு செல்வாக்கு கூடியிருப்பதாக ஆர்ப்பரிக்கின்றனர் தாமரைக் கட்சியினர். அண்ணாமலையின் அதிரடி அரசியலும், அவரின் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு கிடைத்து வரும் ஆதரவுமே இதற்கு சாட்சி என்கிறார்கள் அவர்கள்.

மோடி - அண்ணாமலை
மோடி - அண்ணாமலை

கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவிடம் 10 தொகுதிகள் கேட்டு பாஜக நெருக்கியதாக தகவல்கள் உண்டு. “தமிழ்நாட்டில் செல்வாக்கு சரிந்துவிட்ட காங்கிரஸுக்கே, திமுக 9 தொகுதிகள் கொடுக்கும்போது மிகப்பெரிய எழுச்சியோடு இருக்கும் எங்களுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும்” என அதிமுகவிடம் கண்டிப்புடன் கேட்டது பாஜக .

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக பெட்டியைக் கட்ட இதுவும் ஒரு காரணம். இப்போது அதிமுக தங்கள் அணியில் இல்லாத போதும் அந்த 10 தொகுதி டார்க்கெட்டில் இன்னமும் உறுதியாக இருக்கிறது பாஜக. இம்முறை தமிழ்நாட்டிலிருந்து பாஜகவுக்கு 10 எம்பி-க்களை கட்டாயம் வென்று கொடுக்கவேண்டும் என மாநில தலைமைக்கு தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. அதற்கான 10 தொகுதிகளையும் மார்க் செய்துவிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தென் சென்னை, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை தான் பாஜக குறிவைத்திருக்கும் அந்த 10 தொகுதிகள். இவற்றுடன் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகளும் பாஜகவின் கவனப் பட்டியலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் டார்க்கெட் வைத்திருக்கும் தொகுதிகளில் எல்லாம் வேகவேகமாக பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி, ஒன்றிய, வட்ட அளவிலான பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகளை பாஜக தீவிரமாக்கியுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தக் தொகுதிகளில் முக்கிய தலைவர்களை களமிறக்கும் திட்டமும் பாஜகவிடம் உள்ளதாம். அந்த வகையில் நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் களமிறங்கலாம் என்கிறார்கள். ஏதாவது ஒரு தொகுதியில் அண்ணாமலையே களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த காலங்களை விட இப்போது தமிழக மக்கள் மத்தியில் பாஜகவுக்கு நற்பெயர் உள்ளதால் நிச்சயம் கணிசமான வெற்றியை பெற்றுவிடலாம் என பாஜக மாநில நிர்வாகிகள் தேசிய தலைமைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்களாம். அதனால், எதிர்க் கட்சிகளை உரிய விதத்தில் கவனிக்கவும், தமிழக பாஜகவுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்யவும் மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம். இம்முறை திராவிட கட்சிகளுக்கு நிகரான கவனிப்புகள் இருக்கும் என பாஜக தலைமையிலிருந்து வந்திருக்கும் தகவலால் தமிழக பாஜக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தேர்தல் ஆயத்தப் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள்.

அதேசமயம், விலகிச் சென்ற அதிமுகவை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளையும் பாஜக தலைமை தொடர்வதாகச் சொல்கிறார்கள். ஒருவேளை, அது கைகூடாமல் போனால் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உதிரிகள், பாமக, தேமுதிக, ஐஜேகே கட்சிகளை உள்ளடக்கிய வலுவான கூட்டணியை அமைக்கும் பி பிளானும் பாஜகவிடம் உள்ளது.

பாஜகவின் தேர்தல் வியூகங்கள் குறித்து நம்மிடம் பேசிய பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “ தமிழகத்தில் பாஜக 1980-ல் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 43 ஆண்டுகளாக வெகுசிறப்பாக செயல்பட்டாலும், தேர்தல் வெற்றியைப் பெற சித்தாந்த எழுச்சி, கவர்ச்சிகரமான தலைமை போன்றவை தேவை. அது எல்லாமே இப்போது தமிழகத்தில் எங்களுக்கு கைகூடி வந்துள்ளது.

இதுவரை தமிழகமே பார்க்காத வகையில் சிறப்பான ஒரு தலைவராக அண்ணாமலை இருக்கிறார். அண்ணாமலை மாற்றத்தை தருவார் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. எம்ஜிஆருக்கு இருந்தது போல மிகப்பெரும் மக்கள் வரவேற்பு அண்ணாமலைக்கு கிடைத்துள்ளது.

அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் பெண்கள், மாணவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டதை நானே நேரடியாக பார்த்தேன். அந்தளவுக்கு பிரதமர் மோடியின் சாதனைகள், பாஜகவின் சித்தாந்தத்தை அண்ணாமலை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

அரசியலில் கூட்டணி மட்டுமல்ல, எதுவுமே நிரந்தரமில்லை. எனவே, பாஜகவுடன் கைகோக்க பல்வேறு கட்சிகள் முன்வந்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் எங்களின் வலுவான கூட்டணி இறுதியாகும். கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை வைத்தே இந்த தேர்தலில் ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் நடத்துகிறது. ஆனால் இப்போது, பாஜகவுக்கு மிகப்பெரிய எழுச்சி. கிடைத்திருக்கிறது. தமிழக பாஜக வரலாற்றிலேயே இதை ஒரு பொற்காலமாகப் பார்க்கிறேன்.

எனவே, இந்தத் தேர்தலில் நாங்கள் 40க்கு 40 வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அண்ணாமலையின் எழுச்சிமிக்க தலைமையின் கீழ், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்யும்” என்றார் நம்பிக்கையுடன்.

பாஜகவினர் மட்டுமல்லாது பொதுவான சிலரும் தமிழக பாஜகவின் வளர்ச்சியை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். சென்னையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ‘‘தமிழகத்தில் பாஜக இன்னும் 15 நாட்களில் தேர்தலில் வெற்றிபெறும் என்று நான் கூறவில்லை. அதற்கு அவகாசம் தேவை. ஆனால், பாஜகவினர் சரியான திசையில் செல்கின்றனர். திட்டமிட்டு புத்திசாலித் தனமாக கட்சியின் அடித்தளத்தை கட்டமைக்கின்றனர். 

இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக உருவாகி வெற்றிபெறும். மக்கள் நம்புவதைக் காட்டிலும் பலமான கட்சியாக உருவெடுக்கும்’’ என்று சொன்னார். இதே பிரசாந்த் கிஷோர் தான் கடந்த 2021 தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூகத்தை வடிவமைத்து அதன் வெற்றிக்கு வழிவகுத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தேர்தலில் பாஜகவினர் தாங்கள் நினைத்த இலக்கை அடைகிறார்களா... பிரசாந்த் கிஷோர் போன்றவர்களின் கணிப்பு பலிக்கிறதா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in