போலீஸ் பணம் வாங்கி என் மகனை கொன்றுவிட்டது; சிபிஐ விசாரணை வேண்டும்- ரவுடியின் உடலை வாங்க தந்தை மறுப்பு

ரவுடியின் தந்தை
ரவுடியின் தந்தை

போலீஸார் பணம் வாங்கி கொண்டு மகனை சுட்டுக்கொலை செய்ததாக குற்றச்சாட்டிய ரவுடி முத்து சரவணனின் தந்தை, இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் (54) என்பவர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து செங்குன்றம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையான பார்த்திபன் மீது செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் சோழவரம் பகுதியை சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன்(40) தலைமையிலான கும்பல் பார்த்திபனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து செங்குன்றம் போலீஸார் தனிப்படை அமைத்து கூலிப்பட்டி தலைவன் தலைவன் முத்து சரவணன் கும்பலை தேடி வந்தனர்.

காயம் அடைந்த போலீஸார்
காயம் அடைந்த போலீஸார்

இந்நிலையில் ரவுடி முத்து சரவணன் சோழாவரம் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர் தலைமையிலான போலீஸார் இன்று அதிகாலை 5 மணியளவில் சோழாவரம் மாரம்பேடு பகுதிக்கு சென்று ரவுடி முத்து சரவணன் மற்றும் அவனது கூட்டாளியை சுற்றி வளைத்தனர்‌. அப்போது ரவுடி முத்து போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் போலீஸார் தற்காப்புக்காக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ரவுடி முத்து சரவணன் மற்றும் அவனது கூட்டாளி சண்டே சதீஷ் இருவரும் குண்டு பாய்ந்து சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். ரவுடிகள் சுட்டதில் காவலர்கள் நெவிபிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். உடனே போலீஸார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகள் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த போலீஸாரிடம் டிஜிபி நலம் விசாரிப்பு
காயம் அடைந்த போலீஸாரிடம் டிஜிபி நலம் விசாரிப்பு

பின்னர் துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் செங்குன்றம் அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் கூலிப்படையை தலைவன் முத்து சரவணனை தேடிவந்ததாகவும், இன்று காலை ரவுடி முத்து சரவணன் அவனது கூட்டாளிகளுடன் சோழவரம் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க சென்ற காவலர்கள் மீது ரவுடி முத்து சரவணன் துப்பாக்கியால் சுட்டதால் போலீஸார் பதிலுக்கு சுட்டதாக தெரிவித்தார்.

இதில் ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிபறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். மேலும் ரவுடிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் துப்பாக்கி பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதனை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜூவால் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

காயம் அடைந்த போலீஸாரிடம் டிஜிபி நலம் விசாரிப்பு
காயம் அடைந்த போலீஸாரிடம் டிஜிபி நலம் விசாரிப்பு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜ், போலீஸார் பார்த்திபனின் அண்ணனிடம் பணம் பெற்றுக்கொண்டு என மகனை சுட்டுக்கொலை செய்துவிட்டுவிட்டனர். தனது மகன் மீது போடப்பட்ட வழக்குகள் போலி. நேற்று எனது மகன் முத்து சரவணனை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய போவதாக தகவல் தெரிந்து உடனே ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தான். எனவே எனது மகன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். என் மகன் சாவுக்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகன் சாவுக்கு நியாயம் கிடைக்காமல் அவரது உடலை வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in