
கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள சின்னபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இதேபோல் பூவிளம்பேடை பகுதியைச் சேர்ந்தவர் ரமணய்யா (38). இவர்கள் இருவரும் கூட்டாக மரங்களை வெட்டி, அதனை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இன்று காலை ரமேஷ் வேலைக்காக ரமணய்யாவை, இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, சின்ன புலியூர் அருகே உள்ள ஒரு தைலமர தோட்டத்திற்கு மரத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள வயல்வெளி பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது, ஏற்கெனவே மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அருந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் சென்றபோது ரமேஷ் மற்றும் ரமணய்யா ஆகியோர் சென்ற இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் மின் கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது. இதில் ரமணய்யா உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரமேஷ் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், கவரப்பேட்டை போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரமணய்யாவின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று இரவு கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் அதிகாலையில் மின்கம்பத்தில் இருந்து மின்வயர் அருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதை கவனிக்காமல் சென்றபோது இருவரும் மின் வயரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இப்பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் உள்ள வயர்கள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை சரி பார்த்து மாற்றி தர வேண்டும் என பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!