அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

விஜய் ரசிகர்கள் போஸ்டர்
விஜய் ரசிகர்கள் போஸ்டர்
Updated on
1 min read

தம்பி பொறுத்தது போதும், அரசியலுக்கு வா என்று முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நடிகர் விஜய்யை முதல்வர் பதவியேற்க அழைப்பது போன்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது.  அண்மையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கினார். வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி  உள்ளிட்ட  பல்வேறு அமைப்பினருடன் பனையூரில் உள்ள அலுவலகத்தில் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இன்னொரு பக்கம் விஜய் அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.  தற்போதும் மதுரை மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டரை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் மற்றும் காமராஜர் ஆகியோருக்கு  நடுவே விஜய் நிற்கிறார்.

விஜய் ரசிகர்கள் போஸ்டர்
விஜய் ரசிகர்கள் போஸ்டர்

மேலும் அதில், தம்பி பொறுத்தது போதும் வா... தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க! நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காக காத்திருக்கிறது. "நாளைய முதல்வர் நீயே" என்று வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பலமுறை மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கி வருகிறார். இருந்தாலும், விஜய் ரசிகர்கள் தங்களது மன்றத்தின் பெயர்களை குறிப்பிடாமல், போஸ்டரை அடித்து ஒட்டி வருகின்றனர். லியோ படம் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்துள்ள நிலையில் அதற்கு ஈடாக இந்த போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in