40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
Updated on
2 min read

2024 தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சென்னையில் ஒரு வார காலத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் இவர்களுடன் 3 கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். மேலும் அரசு இந்த பரிசீலனைகளை அமல்படுத்த கால அவகாசம் தேவை என்பதால் ஆசிரியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று காலை போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆசிரியர்களின் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போவதாக ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ”கடந்த 7 நாட்களாக அறவழியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். ஆனால் பல வழிகளில் எங்கள் போராட்டத்தை நீர்த்துப் போக செய்யும் முயற்சிகள் தான் நடந்து வருகின்றன. இது குறித்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அரசு பணியில் அமர்த்த வலியுறுத்தினோம். நிதி பற்றாக்குறை தான் உள்ளது என்றால் நீதியும் பற்றாக்குறையாக உள்ளதா? அறவழியில் போராடிய எங்களை கைது செய்து அரசு அடாவடி செய்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம்” என தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்களின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in