டீப்ஃபேக் வீடியோ என்னைக் கடுமையாக பாதித்துள்ளது: நடிகை ராஷ்மிகா கதறல்!

ராஷ்மிகா
ராஷ்மிகா

டீப்ஃபேக் வீடியோவால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

டீப் ஃபேக் டெக்னாலஜி மூலமாக ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. உண்மையில் அந்த வீடியோவில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண். இவரது வீடியோவைத் தான் ராஷ்மிகா மந்தனா போல இப்படி டீப் பேக் முறையில் எடிட் செய்துள்ளனர்.

இப்படி தவறாக பிரபலங்களைச் சித்தரிப்பவர்களையும் இது போன்ற டெக்னாலஜியை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க நடவடிக்கை வேண்டும் என நடிகர் அமிதாப் பச்சன் முதற்கொண்டு இணையத்தில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இணையத்தில் எழுந்திருக்கும் விவாதங்களில் மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரும் பங்கேற்று அரசின் ஆட்சேபத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழான நடவடிக்கைகள் சிலவற்றையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வு தந்துள்ளார்.

நடிகை ராஷ்மிகாவின் பதிவு
நடிகை ராஷ்மிகாவின் பதிவு

இதுகுறித்து நடிகை ராஷ்மிகா, " இணையத்தில் பரவி வரும் என்னைப் பற்றிய இந்த டீப்ஃபேக் வீடியோ என்னை கடுமையாக பாதித்துள்ளது. இதுபோன்று தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது என்னைப் போல பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் இதுபோன்ற சமயத்தில் என்னைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருக்கும் நண்பர்கள், குடும்பம் மற்றும் திரைத்துறையினருக்கு நன்றி. இதுவே நான் கல்லூரி, பள்ளியில் படிக்கும்போது நடந்திருந்தால் எப்படி இதை சமாளித்திருப்பேன் எனத் தெரியவில்லை" எனக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க சைபர் போலீஸை டேக் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in