சனாதனம் குறித்து நான் பேசியது தவறு கிடையாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சனாதனம் குறித்து நான் பேசியது தவறு கிடையாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"சனாதனம் குறித்து நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சென்னை அசோக் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்துப் பெற்றார். அப்போது அக்கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்துவது நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் மறுபடியும் கூறுகிறேன். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை ஆதரித்து அதிமுகவினரும் சட்டமன்றத்தில் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதுதான் இந்த நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வு விலக்கு மசோதாவை இரண்டு முறை மத்திய அரசு நிராகரித்ததை அதிமுக மக்களிடத்தில் கூறவே இல்லை. எனவே, இப்போதாவது உண்மையாக இருங்கள். திமுக உண்மையாக போராடிக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்று, ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒன்று பேசுவது கிடையாது. இது உதயநிதியின் பிரச்சினையோ, திமுகவின் பிரச்சினையோ கிடையாது. இது மக்களுடைய பிரச்சினை. மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அந்தப் பெருமை திமுகவுக்கு வேண்டாம். அது முழுக்க முழுக்க அதிமுகவுக்கே கொடுக்கிறேன். இது அனைவருக்குமான பெருமையாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தவறு என்றும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, "நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது கொள்கையைத்தான் நான் பேசியிருக்கிறேன். அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் ஆகியோர் சனாதனத்துக்கு எதிராக பேசியதைவிட நான் தவறாக எதுவும் பேசவில்லை. எதுவாக இருந்தாலும், சட்டப்படி சந்திப்போம்" என்றார்.

அமைச்சராக இருந்துகொண்டு மதத்துக்கு எதிராக தவறாக பேசியதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது குறித்த கேள்விக்கு, "அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்குப் போய்விடும். எம்எல்ஏ பதவி இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும். இளைஞரணி செயலாளர் பதவியும் அப்படித்தான். இவை எல்லாவற்றையும்விட முதலில் மனிதனாக இருக்க வேண்டும். எனவே, சட்டப்படி சந்திப்போம்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in