நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்! அடித்துச் சொல்லும் சீமான்

 சீமான்
சீமான்

``மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து பாஜக அல்லாத மாநில அரசுகளை மத்திய அரசு அச்சுறுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கடந்த பிப்ரவரி 13ம் தேதி ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அருந்ததியர் சமூகம் குறித்தும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்தும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக பட்டியலின அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று சீமான் ஆஜரானார்.

 சீமான்
சீமான்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து மத்திய அரசு பாஜக அல்லாத மாநில அரசுகளை அச்சுறுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது. திமுக அமைச்சர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த சோதனைகள் மூலம், அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என நிறுவ மத்திய அரசு முயல்கிறதா?

இலங்கையில் மலையகத்தமிழர்கள் நிகழ்ச்சியில் முதல்வரின் உரை ஒலிபரப்பப்படாமல் தடுக்கப்பட்டது மூலம் இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பது வெளிப்படையாக உறுதியாகியுள்ளது. சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சரியானது” என்றார்.

ஈரோட்டில் சீமான் பேட்டி
ஈரோட்டில் சீமான் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், ”திமுகவை ஆதரிப்பது எனது நோக்கம் அல்ல. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் கூறிய கருத்துக்கள் சரியானது என்பதே எனது கருத்து. உணவு என்பது தனிநபரின் விருப்பம். தனிமனிதரின் உணவு உறுதி செய்யப்படாத நிலையில், இந்த உணவைத்தான் உட்கொள்ள வேண்டும் என கூறுவது தவறு. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், மீண்டும் இலங்கையை நினைவூட்டுகிறது. பெருந்தன்மையால் தமிழர்கள் வீழ்ந்தது போல் பாலஸ்தீனர்களும் வீழ்கின்றனர்.

வடமாநில தொழிலாளர்களை வேலைக்காக தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பதும் அதே நிலையை ஏற்படுத்தும். நடிகர் விஜய் நிச்சயம் அரசியல் கட்சி துவங்கி அரசியலுக்கு வருவார். திரைப்படங்களில் நடிப்பதை நிச்சயம் நிறுத்திக் கொள்வார். அவர் கட்சி துவங்கியதும் எங்களுடைய ஆலோசனைகளை முன்வைப்போம்” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in