போடி ரயில் நிலையம் 
க்ரைம்

ரயில் பயணக் கனவு... நிறைவேறாத ஆசையால் சிறுவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

காமதேனு

அஅத தேனியில் ரயிலில் பயணிக்க ஆசைப்பட்ட சிறுவன், பெற்றோர் அழைத்து செல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், போடி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு முத்து, பாலாஜி என 2 மகன்கள் இருந்தனர். ராமகிருஷ்ணன் கூலி வேலை செய்து வரும் நிலையில், ஜெயா ஏலக்காய் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இளைய மகன் பாலாஜி 9-ம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், வீட்டில் இருந்து வந்துள்ளார். நீண்ட வருடங்களாக மூடிக்கிடந்த போடி ரயில் நிலையத்தில் சிறுவன் பாலாஜி விளையாடிச் சுற்றி திரிந்தார். சமீபத்தில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ரயிலில் குழந்தைகள் தங்களது பெற்றோருடன் ரயிலில் பயணிப்பதை பாலாஜி பார்த்து வந்துள்ளார். இதனால் தானும் தனது பெற்றோருடன் ரயிலில் பயணிக்க வேண்டும் என அவர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட சிறுவன் பாலாஜி

ஆனால், இதனை உணராத பெற்றோர், தங்களின் வறுமை நிலையை எண்ணி சிறுவன் பாலாஜியின் ஆசையை புறம் தள்ளியதாக கூறப்படுகிறது. இருவரும் கூலி வேலைக்கு செல்வதால் ரயிலில் செல்லும் அளவிற்கு வசதி இல்லை என சிறுவனிடம் கூறியுள்ளனர். இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த சிறுவன் பாலாஜி, வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கினார்.

பணி முடிந்து வீட்டிற்கு வந்த ஜெயா, தனது மகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு கதறி துடித்ததோடு, மயங்கி சரிந்தார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மாணவன் பாலாஜி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாய் ஜெயாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

108 ஆம்புலன்ஸ் (கோப்பு படம்)

இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தனது ரயில் பயண ஆசை குறித்து எழுதியுள்ள சிறுவன் பாலாஜி, அண்ணனையாவது நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். வீட்டின் வறுமையை அறியாமல் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் அதிகரித்து வரும் நிலையில், ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற எளிய ஆசைக்காக, வீட்டின் வறுமை புரியாமல், சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT