அதிக செல்போன் பயன்பாடு; விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு!

அதிக செல்போன் பயன்பாடு; விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு!

ஒரு நாளில் 20 முறைக்கும் அதிகமாக செல்போன்களை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் 21% கூடுதலாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் உலகளவில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 50%க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இது ஏன் என்று ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகையான ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். காற்று, சூழல் மாசுபாடு, உணவு மற்றும் தண்ணீரில் உள்ள நச்சுகள், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களின் அதிகரிப்பு காரணமாக இருக்குமா என்ற ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

புதிதாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஆய்வில், 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதன் முடிவில் ஒரு நாளைக்கு 20 முறைக்கும் அதிகமாக செல்போனை பயன்படுத்தும் இளைஞர்களுக்கு அவர்களுடைய விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான அபாயம் 21% அதிகமாக உள்ளது என்றும், ஒட்டுமொத்தமாக குறைவாக செல்போனை பயன்படுத்துபவர்களை விடவும், அதிக நேரம் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகம் செல்போன் பயன்படுத்துவோருக்கு விந்து செறிவு பாதிக்கப்படும் அபாயம் 30 சதவீதம் அதிகம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில் விந்தணுக்களின் இயக்கம் மற்றும் விந்தணுக்களின் வடிவத்தில் இதன் காரணமாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்ற ஆறுதலான ஆய்வு முடிவும் நமக்கு கிடைத்துள்ளது.

குழந்தை பெறும் தகுதியை பெற ஒரு இளைஞரின் விந்தணுக்களின் எண்ணிக்கை , அதன் நீந்தும் திறன் மற்றும் அவற்றில் இருக்கும் ஆரோக்கியமான மரபணு, சரியான வடிவம் ஆகியவை முக்கியமான அம்சங்களாக உள்ளது. தற்போது வரை செல்போன் பயன்பாட்டினால் இளைஞர்களின் குழந்தை பெறும் தன்மை பாதிக்கப்பட்டிருப்பது குறித்து மிகத் தெளிவான உறுதியான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை என்றாலும், அதிகப்படியான செல்போன் பயன்பாடு விந்தணுவை பாதித்து குழந்தை பெறும் தகுதியை குறைக்கிறது என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

"விந்தணுக்களின் எண்ணிக்கை முக்கியமானது என்றாலும், விந்தணுவின் நீச்சல் திறன், ஆரோக்கியமான டிஎன்ஏ மற்றும் சரியான வடிவமாக இருப்பது, குறைந்தபட்சம் முக்கியமானது" என்று கருவுறுதல் கிளினிக்குகளின் நெட்வொர்க்கான கேர் ஃபெர்ட்டிலிட்டியின் தலைமை அறிவியல் அதிகாரி அலிசன் காம்ப்பெல் கூறியுள்ளார்.

பொதுவாகவே அண்மை ஆண்டுகளில் இளைஞர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் குறைந்து இருக்கிறது. குழந்தையின்மை குறைபாட்டுடன் வரும் ஆண்களின் பெரும்பாலானோருக்கு விந்தணுக்களின் இயக்கம் அல்லது டிஎன்ஏ குறைபாடு காணப்படுகிறது.

செல்போனில் இருந்து நேரடியாக வெளியாகும் மிகச் சிறிய அளவிலான மின்காந்த கதிர்வீச்சு நேரடியாகவே விந்தணுக்களை பாதிக்கிறது. விலங்குகளிடம் செய்யப்பட்ட சோதனையிலும் இது உறுதியாகி உள்ளது.

தற்போது நடந்து முடிந்த ஆய்வில் நமக்கு கிடைத்த ஒரே ஒரு நல்ல தகவல் என்னவென்றால், தகவல் தொழில்நுட்பம் உயர உயர புதிய நவீன செல்போன்களால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது. அதாவது 2ஜி மற்றும் 3ஜி செல்போன்களுடன் 4ஜி மற்றும் 5ஜி செல்போன்களால் ஏற்படும் பாதிப்பு மிக குறைவாக இருக்கிறதாம். இதற்கு காரணம் புதிய வகை செல்போன்களில் மிக குறைந்த அளவிலான கதிர்வீச்சு மட்டுமே வெளியாகிறது என்பது தெரியவந்துள்ளது.

"நவீன 4G மற்றும் 5G பதிப்புகளுடன் ஒப்பிடும்போது, பழைய 2G மற்றும் 3G ஃபோன்களால் மிகப்பெரிய விளைவுகள் காணப்பட்டதைக் கவனிப்பதில் நான் ஆர்வமாக உள்ளேன். இதை என்னால் விளக்க முடியவில்லை,” என்று லண்டன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரியல், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் துணைத் தலைவர் ஆலன் பேசி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த ஆய்வுகள் இளைஞர்களிடையே விந்தணு குறைபாட்டுக்கான காரணத்தை மிக துல்லியமாக நிரூபிக்க முடியவில்லை என்றும், வாழ்முறை பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம், உணவு போன்றவையும் இதன் முக்கிய காரணிகளாக இருக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். குறைந்தபட்சம் உண்மை இறுதிச் செய்யப்படுவதை இளைஞர்கள் செல்போன்களை பயன்பாட்டை கூடுமானவரை குறைத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் ஆண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடுப்பு பகுதியில் அதிக வெப்பமடையக்கூடாது. சீரான உணவை உண்ண வேண்டும், ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க வேண்டும், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும், மதுவைக் கட்டுப்படுத்தவும், கருத்தரிப்பதில் சிக்கல் இருந்தால் உதவி பெறவும் எனவும் சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கலிபோர்னியா பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பும் போது கதிர்வீச்சு குறைவாக உள்ளது. பெரிய கோப்புகளைப் பதிவிறக்கும் போது, ஆடியோ அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் போது, வேகமாக நகரும் பேருந்து, கார் அல்லது ரயிலில் இருக்கும் போது கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். எனவே போனை உடல் மற்றும் தலையில் இருந்து விலக்கி வைக்கவேண்டும். அதற்கு பதிலாக ஸ்பீக்கர்ஃபோன் அல்லது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தவும். மேலும் செல்போனை பிரீஃப்கேஸ் அல்லது பர்ஸில் எடுத்துச் செல்லவும் கலிபோர்னியா பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in