டிக்டாக் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகள் மற்றும் பல்வேறு கேமிங் ஆப்ஸ் மூலம், உலகளாவிய அளவில் உளவு பார்ப்பதாக சீனாவுக்கு எதிரான புகார் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இந்தியாவில் பிரபலமாக இருந்த டிக்டாக் செயலியை தடாலடியாக மத்திய அரசு தடை செய்தது. இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகளை டிக்டாக் மூலம் சீனா களவாடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தியா அந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த வரிசையில் உலகின் பல்வேறு நாடுகளும் டிக்டாக் தடையை பரிசீலித்து வருகின்றன. தன்னை உலக வல்லசராக பாவிக்கும் நாடுகள், உலகளாவிய வகையில் இதர தேசங்களை உளவு பார்ப்பதுண்டு. சீனா ஒரு படி மேலே தாவி, உலக மக்களையே உளவு பார்த்து வருகிறது.
இதற்காக உலக மக்களை ஆட்டுவிக்கும் டிக்டாக் போன்ற சமூக ஊடக செயலிகள் மற்றும் கேமிங் செயலிகளை புழக்கத்தில் விட்டுள்ளது. அவற்றை தரவிறக்கி புழங்கும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளை சட்டவிரோதமாக சீனா சேகரித்து வருகிறது. உலகின் பெரியண்ணனாக தன்னை பாவிக்கும் சீனா, பிற நாட்டு மக்களையும் வேவு பார்க்கும் தகவல் சர்வதேச அளவில் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்திருக்கும் இந்த புகார்களை தற்போது ஆஸ்திரேலிய ஆய்வை மேற்கோள்காட்டி, அமெரிக்காவின் அரசு வானொலி சேவையான வாய்ஸ் ஆப் அமெரிக்கா மீண்டும் உறுதிசெய்துள்ளது. இந்த சீன பின்னணியிலான செயலிகளில், சமூக ஊடகம், ஆன்லைன் விளையாட்டு, இணைய சந்தை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் அடங்கும்.
உலகளாவிய தகவல் தகவல் சூழலை மறுவடிமைப்பு செய்யவதிலும், அயல்நாடுகளில் அவற்றின் அனுமதியின்றி தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும், உலக அதிகாரத்தின் மீதான தனது பிடியை வலுப்படுத்தவும், அப்படியான செயல்பாடுகளை சட்டபூர்வமாக்கவும், ஒட்டுமொத்தமாக சீனாவின் கலாச்சார, தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் ராணுவ செல்வாக்கை உயர்த்தவும் சீனா முயன்று வருவதை ஆதாரங்களுடன் அந்த ஆய்வு அம்பலப்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த புகார்கள் தொடர்பாக சீனா தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் இதுவரை இல்லை. பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான மோதல்களை முன்வைத்து ஆஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் ’சீன எதிர்ப்பு வெறி’ என தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சீனா வழக்கமாக மறுத்து வந்தது.
இதனிடையே டிக்டாக் செயலியின் உளவு மற்றும் தனிப்பட்ட தகவல் களவுக்கு எதிரான அமெரிக்காவின் பஞ்சாயத்து அங்கே உச்சம் தொட்டுள்ளது. டிக்டாக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் அரசியலமைக்கு எதிரான போக்கை மேற்கொள்வதாக நீதிமன்ற சவாலுக்கு ஆளாகி உள்ளது. இது டிக்டாக் தளத்தை அமெரிக்காவுக்கே விற்க வேண்டும் அல்லது அங்கே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆஸ்திரேலிய அரசு ஏற்கனவே தனது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அச்சம் காரணமாக செல்போன்கள் உள்ளிட்ட அரசு சாதனங்களில் டிக்டாக்கை தடை செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த அதிர்ச்சி... சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!
கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!
உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!
மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!