மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

கொலை செய்யப்பட்ட குழந்தைகள்
கொலை செய்யப்பட்ட குழந்தைகள்

மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மோகன்(40). இவருக்கு திருமணமாகி யமுனா (35) என்ற மனைவியும், சாய் ஸ்வாதி (13), தேஜஸ் (5), என இரு குழந்தைகளும் இருந்தனர். மோகன் தனியார் நிறுவனத்திலும், அவரது மனைவி யமுனா தனியார் பிரிண்டிங் பிரஸிலும் வேலை பார்த்து வந்தனர். இவர்களது மூத்த மகள் சாய் ஸ்வாதி அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், மகன் தேஜஸ் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தனர்.

இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மோகன் தனது மனைவியின் நடத்தை சந்தேகப்பட்டு அவரை தினமும் அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது யமுனா புகார் அளித்தார். இதன் பின்னர் கணவரைப் பிரிந்து தனது பிள்ளைகளுடன் யமுனா தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் கணவர் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் யமுனாவிடம் சமாதானம் பேசி இருவரையும் சேர்த்து வைத்தனர். இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இன்று காலை யமுனா வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அக்கம்பக்கத்தின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவரது கணவர் மோகன் தூக்கில் பிணமாகவும், மகள் சாய் ஸ்வாதி கழுத்து அறுத்த நிலையிலும் , மகன் தேஜஸ் கழுத்து நெரித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே யமுனா இதுகுறித்து குமரன் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் கணவன், மனைவி இடையே நேற்று வழக்கு போல் மீண்டும் தகராறு ஏற்பட்டதும். இதனால் ஆத்திரமடைந்த மோகன் தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸார் அவரது உறவினர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in