நடிகை மனோரமா நினைவு தின பகிர்வு: இந்தியளவில் சாதித்த ஒரே நடிகை!

நடிகை மனோரமா
நடிகை மனோரமா

நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய சமயத்தில் தனியொரு மனுஷியாக நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை மனோரமா. ‘ஆச்சி’ என ரசிகர்களால் செல்லமாகவும், உரிமையுடனும் கொண்டாடப்படும் தனிப்பெரும் கலைஞரின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று. நம் வாசகர்களுக்காக மனோரமா ஆச்சி குறித்தான சில நினைவலைகள்...

நடிகை மனோரமா
நடிகை மனோரமா

* சினிமா பலருக்கும் கனவு தேசம். தங்களின் நடிப்புத் தாகத்திற்காகவும், திறமையை வெளிப்படுத்த தேவைப்படுகிற வாய்ப்பாகவும் தான் பெரும்பாலும் சினிமாத்துறைக்குள் காலடி எடுத்து வைப்பார்கள். ஆனால், மனோரமாவுக்கு சினிமா அப்படியான பெருங்கனவு எல்லாம் கிடையாது. இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவரது தந்தை, மனோரமாவின் தாயையும் இவரையும் கைவிட, குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பன்னிரெண்டாவது வயதில் பத்து ரூபாய் சம்பளத்திற்கு ‘யார் மகன்’ என்ற நாடகம் மூலம் நடிப்புத் துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் மனோரமா.

* இவரது நடிப்புத் திறமையை திரையுலகினரும், ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தாலும அவரது தாயார் இவரது நடிப்பை ஒருமுறை கூட பாராட்டியதே இல்லை.

‘நீ இன்னும் நல்லா நடிச்சிருக்கனும்’ என்ற வார்த்தைகள் தான் ஒவ்வொரு முறையும் அவரிடம் இருந்து வருமாம். ஆனால், இதுகுறித்து மனோரமா ஒருமுறை கூட வருத்தப்பட்டதே இல்லை. ’என்னை மேலும் சிறந்த நடிகையாக்கவே அவர் அப்படி சொன்னார்’ என்பார் சிரித்துக் கொண்டே.

நடிகை மனோரமா
நடிகை மனோரமா

* நடிப்பைப் போலவே இவருக்கு அபாரமாக பாடும் திறமையும் வாய்த்திருந்தது. சினிமா பாடல்களைப் பார்த்தும், கிராமஃபோனில் கேட்டும் தன் பாடும் திறமையை வளர்த்துக் கொண்டார். படத்தில் இவர் முதன்முதலாக பாடிய பாடல், ’மகளே உன் சமர்த்து’ படத்தில் ‘தாத்தா தாத்தா பொடி கொடு’ என்ற பாடல் தான்.

* மனோரமாவுக்குள் இருந்த நகைச்சுவை நடிகை என்ற திறமையை ஊக்குவித்தது கவிஞர் கண்ணதாசன் தான். அவர் தயாரித்த 'மாலையிட்ட மங்கை' படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியபோது, 'எனக்கு நகைச்சுவையே வராது' என்று தயங்கி இருக்கிறார் மனோரமா. அதற்கு கண்ணதாசன், 'நீ நகைச்சுவை நடிகையாக நடித்தால் சரித்திரம் படைப்பாய்' என்று சொல்லியிருக்கிறார்.

நடிகை மனோரமா
நடிகை மனோரமா

* சிவாஜி கணேசனை தனக்கு அண்ணன் போல என்பார். மனோரமாவின் தாயைப் போலவே சிவாஜி கணேசனும் மனோரமாவின் நடிப்பைப் பாராட்டி அவரிடம் நேரிடையாக சொன்னது இல்லை. ஆனால், பிறரிடம் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதேபோல, இவரது நடிப்பைப் பாராட்டி ‘மனோரமா ஒரு பெண் சிவாஜி’ என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சோ.

* மனோரமா நடிக்க வேண்டும் என விரும்பிய கதாபாத்திரம் திருநங்கை கதாபாத்திரம். எத்தனையோ கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் தான் நடித்ததில் அவர் பெருமைப்பட்ட கதாபாத்திரம் ’நடிகன்’ படத்தில் ஏற்று நடித்த பாத்திரம்.

நடிகை மனோரமா
நடிகை மனோரமா'நடிகன்’ படத்தில்...

* நடிகர் நாகேஷூடன் இவர் இணைந்து நடித்தப் படங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை. அதேபோல, நடிகர் கமல்ஹாசனை தனது இன்னொரு மகன் என்பார்.

* நாடகம், சினிமா என அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரே நடிகை மனோரமா தான். 1500-க்கும் மேற்பட்ட படங்களிலும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான நாடகங்களிலும் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகையும் மனோரமா தான்.

இதையும் வாசிக்கலாமே...

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாகிறார் காஜல் அகர்வால்!

காதலனுடன் படுக்கையறையில் நெருக்கம்... நேரில் பார்த்த 2 தங்கைகளின் தலையை சீவிய அக்கா!

நடிகை மனோரமா நினைவு தின பகிர்வு: இந்தியளவில் சாதித்த ஒரே நடிகை!

வைரலாகும் ஏஐ தொழில்நுட்பம்... பிரபாஸுடன் அனுஷ்காவை சேர்த்து வைத்த ரசிகர்கள்!

தமிழக பாஜகவிலிருந்து முக்கிய தலைவர் விலகல்; தொண்டர்கள் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in