தென்னாப்பிரிக்கா போராடி தோல்வி; இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்

தென்னாப்பிரிக்கா போராடி தோல்வி; இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்

உலகக் கோப்பை 2வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் வரும் 19ம் தேதி ஆஸ்திரேலியா மோதுகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் பவுமா களமிறங்கினர். பவுமா முதல் ஓவரிலேயே டக்அவுட் ஆனார். இதையடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென்- டிகாக் பொறுமையாக விளையாடினர். 14 பந்துகள் சந்தித்த டிகாக் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மார்க்ரம் 10 ரன்னிலும், பொறுமையாக விளையாடிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். 11.5 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறியது. இதையடுத்து கிளாசன் - மில்லர் ஜோசி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை ஹெட் பிரித்தார். கிளாசன் 47 ரன்னில் இருந்த போது ஹேட் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்து வந்த மார்கோ யான்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட் போனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மில்லர் அரைசதம் விளாசி அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் சதம் அடித்து 101 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா வீரர்கள் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வந்த டிராவிஸ் ஹெட்- டேவிட் வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடியது. 6.1 ஓவரில் அணியின் ஸ்கோரை 60 ஆக குவித்தனர். 18 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்திருந்த வார்னர், மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ், ரபாடா பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு பக்கம் அதிரடியாக காட்டி வந்த டிராவிஸ் ஹெட் 48 பந்தில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசினார். பின்னர் வந்த ஸ்மித் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 62 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்த மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து, ஜோஷ் இங்லிஸ் - ஸ்டார்க் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தினர். அணியின் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்லிஸ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 47.2 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி, ஜெரால்ட் கோட்ஸி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரபாடா, மார்க்ரம், மகராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in