அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளி பூங்கா; அமைச்சர் காந்தி தகவல்

 அமைச்சர் காந்தி
அமைச்சர் காந்தி

பொங்கலுக்கான வேட்டி, சேலைகள் டிசம்பர் மாத இறுதியில் வருவாய்துறையினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

கோவையில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் இன்று துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்றார். இந்நிகழ்வில் மத்திய, மாநில அரசுகளின் ஜவுளித் துறையின் செயலாளர்கள், ஆணையர்கள், ஜவுளி தொழிலில் உள்ள தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.

ஜவுளி துறையில் 'தொழில்நுட்ப ஜவுளி' பிரிவு என்பது முக்கியமான சந்தையை பிடித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப ஜவுளி சந்தையின் சர்வதேச வாய்ப்புகள், தொழிலில் உள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு களையலாம் என்பது குறித்து இந்த 2 நாட்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்படுகிறது.

கோவையில் நடைபெற்ற ஜவுளித்துறை கருத்தரங்கில் அமைச்சர் காந்தி
கோவையில் நடைபெற்ற ஜவுளித்துறை கருத்தரங்கில் அமைச்சர் காந்தி

கடந்தாண்டு, முதல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்ற நிலையில், 2வது கருத்தரங்கம் கோவையில் நடைபெறுகிறது. இந்த ஜவுளித்துறை தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் காந்தி, ”முதல் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்ற நிலையில், 2வது கருத்தரங்கை கோவையில் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் இங்கு நடத்தப்படுகிறது. ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசி விரைவில் வெளியிட போகிறோம்.

டெக்னிக்கல் டெக்ஸ்டைல்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மாநில அரசு உணர்ந்து அதற்கேற்ப செயல்படுகிறது. ஒரு மில்லின் எகானமி என்ற இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் உதவும். விருதுநகரில் அமையவுள்ள ஜவுளி பூங்காவில், தொழில்நுட்ப ஜவுளி தொடர்பாக ஊக்குவிக்க ஜவுளிதுறையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். சேலத்தில் 110 ஏக்கரில் 881 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள ஜவுளி பூங்காவிற்கு மத்திய அரசின் நிதியை பெற்று தர மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்தார்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜவுளித்துறையினர்
கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜவுளித்துறையினர்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”அனைத்து மாவட்டங்களிலும் சிறிய ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.2.5 கோடி மதிப்பில் ஒரே இடத்தில் 3 தொழிற் கூடங்கள் அமைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 110 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், 10 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்திற்கு முன்னதாகவே, பொங்கலுக்கு தேவையான வேஷ்டி, சேலைகள் வருவாய் துறையினரிடம் டெலிவரி கொடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மித்ரா திட்டம் விருதுநகரில் செயல்படுத்த கட்டாயம் பரிசீலிப்போம். ஏற்கெனவே ஜவுளி கொள்கை உள்ள நிலையில், 100 கோடிக்கும் மேல் உள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவி செய்வதால், மாநில அரசின் புதிய ஜவுளி கொள்கையில் 50 கோடி கீழ் உள்ள செயற்கை நூலிழை தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யப்படும்” என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in