இனி என்ன செய்வார் அண்ணாமலை?

அண்ணாமலை
அண்ணாமலை

பொறுத்தது போதும் பொங்கியெழுவோம் என்று பாஜகவுடனான கூட்டணியை முறித்துள்ளது அதிமுக. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அதிமுக தலைவர்கள் பலருமே வெளிப்படையாக சொல்கின்றனர். "நான் மேனேஜர் இல்லை, லீடர்" என்று சொல்லி வந்த அண்ணாமலை இனி என்னசெய்யப் போகிறார்?

தமிழக அரசியலில் அதிரடி முடிவுகளை அசால்டாக எடுக்கும் கட்சியென்றால் அது அதிமுகதான். ஓவர்நைட்டில் மத்திய பாஜக ஆட்சியையே கவிழ்த்த வரலாறும் ஜெயலலிதாவுக்கு உண்டு. அப்படிப்பட்ட அதிமுகவையே கடந்த சில ஆண்டுகளாக தனது கைக்குள் வைத்து ஆட்டம் காட்டியது பாஜக. இந்தச் சூழலில் பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையும், அதே ஜெயலலிதா பாணியில் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை கடுமையாக டீல் செய்தார்.

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

அண்ணாமலை தொடக்கம் முதலே திமுகவை கடுமையாக விமர்சித்தாலும், ‘திராவிடக் கட்சிகள்’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகிறார். இது அதிமுக சீனியர்களுக்கு பெரும் நெருடலைக் கொடுத்தாலும், வேறு வழியின்றி பொறுத்துப் போனார்கள். இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட அண்ணாமலை அடுத்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறித்து விமர்சிக்க ஆரம்பித்தார். அடுத்த அதிரடியாக, ஜெயலலிதாவையே ஊழல் செய்தவர் என்றார். அதிமுகவின் மாநில மாநாட்டை விமர்சித்தார். கடைசியாக அதிமுகவின் பெயரில் நிலைபெற்றுள்ள அண்ணாவையை விமர்சனத்துக்குள்ளாக்கினார். இதற்கு மேலும் பொறுத்துப் போனால், தமிழக அரசியலில் ஒன்றுமில்லாமல் போய்விடுவோம் என்று கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது அதிமுக.

அண்ணாமலை சாதித்தது என்ன?

2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், அடித்தளம் எதுவுமே இல்லாத பல மாநிலங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவால் அப்படியும் எதையும் சாதிக்கமுடியவில்லை.

ஆனால், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல காய் நகர்த்தி அதிமுகவில் ஆடுபுலி ஆட்டம் ஆடி லைம் லைட்டிற்கு வந்தது பாஜக. அப்போது பாஜக மாநில தலைவராக தமிழிசை இருந்தார். அந்த சூழலில் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து தமிழிசைக்கு ஆளுநர் புரமோஷன் கொடுத்துவிட்டு, எல்.முருகனை தலைவராக்கினார்கள் அவரும் ‘வேல் யாத்திரை’யெல்லாம் நடத்திப்பார்த்தார். அதற்குப் பின்னரும் பாஜகவால் 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால்தான் முருகனையும் மத்திய அமைச்சராக்கிவிட்டு, அண்ணாமலையை மாநில தலைவராக்கினார்கள்.

எல்.முருகனுடன் அண்ணாமலை
எல்.முருகனுடன் அண்ணாமலை

அண்ணாமலையை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடனேயே மாநில தலைவராக்கியது பாஜக. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாததால் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும் நினைத்தார்கள். அதனால்தான் பழைய முகங்களை விட்டுவிட்டு புதுமுகமான அண்ணாமலையை கொண்டு வந்தார்கள். அவருக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டது. அவரும் இஷ்டத்துக்கு திமுகவை விமர்சிக்க ஆரம்பித்தார்.

தமிழகத்தில் இதுவரை இருந்த பாஜக தலைவர்களெல்லாம் கடைபிடித்துவந்த அடிப்படை அரசியல் தார்மீகங்களை யெல்லாம் தூக்கியெறிந்து தடாலடியாக பேச ஆரம்பித்தார் அண்ணாமலை. முக்கியமாக, பத்திரிகையாளர்களை டார்கெட் செய்து, விமர்சித்து பிரபலமானார். அண்ணாமலையின் இத்தகைய பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பாஜகவின் தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை ஊட்டியது.

அதிமுக, திமுகவில் மட்டுமே தடாலடி, அதிரடி அரசியலைப் பார்த்து பழக்கப்பட்டிருந்த பாஜகவினருக்கு, அண்ணாமலையின் அரசியல் புது தெம்பை ஊட்டியது. இதனால் நிர்வாகிகள் புத்துணர்ச்சியுடன் பணியாற்றத் தொடங்கினார்கள். அதேபோல சமூக வலைதளங்களை திறந்தாலே அண்ணாமலையின் முகம் தெரியும்படி, தினமும் ஏதேனும் சலசலப்பு கருத்துகளை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அண்ணாமலை யாத்திரை
அண்ணாமலை யாத்திரை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இணையாக தமிழக பாஜகவிலும் கோஷ்டி அரசியல் உண்டு. அப்படி இருந்த அனைத்து கோஷ்டிகளையும் தனக்குப் பின்னால் நிற்கவைத்தார் அண்ணாமலை. தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி ஓரங்கட்டினார். ‘நான் மேனேஜர் அல்ல லீடர்’ என தனக்குத்தானே அறிவித்துக்கொண்டு அதிரடித்தார் அண்ணாமலை. அண்ணாமலையின் அதிரடியும், அதிமுகவின் பலவீனமும் தமிழகத்தில் அடித்தளமே இல்லாத பல பகுதிகளிலும் பாஜகவின் கொடி பறக்க காரணமாக அமைந்தது.

அண்ணாமலை சறுக்கியது எங்கே?

தமிழ்நாட்டில் அதிரடி அரசியல் எடுபடும்தான். ஜெயலலிதாவை அதிரடி அரசியலின் உச்சமாக சொல்லலாம். ஆனால் அவர் ஒரேயடியாக ஒரே நேரத்தில் எல்லோரையும் பகைத்துக்கொள்ள மாட்டார். தற்போது தடாலடியாகப் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் சீமான்கூட, எல்லோரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளாத வகையில் பார்த்துக்கொள்கிறார். ஆனால், அண்ணாமலை தொடக்கம் முதலே சகட்டுமேனிக்கு அனைவரையும் தாக்கும் அரசியலில் இறங்கினார். எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதோடு நிறுத்தாமல், கூட்டணியில் இருக்கும் கட்சிகளையுமே அடிக்கடி சீண்டிப்பார்க்க ஆரம்பித்தார். இன்னும் சொல்லப்போனால் தனது கட்சியில் இருப்பவர்களுக்கே வார் ரூம் மூலமாக ‘மறைமுகமாக’ ஸ்கெட்ச் போட்டதாகவும் அண்ணாமலை மீது குற்றசாட்டு உள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலைதமிழக பாஜக தலைவர்

ஒருபக்கம் பாஜகவினரின் நம்பிக்கை முகமாக தெரியத் தொடங்கிய அண்ணாமலை, மற்றொரு பக்கம் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்துக்கட்சிகளின் ‘எதிரி முகமாக’ தெரிய ஆரம்பித்தார். அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்துக்கொண்டாலும், தனிப்பட்ட முறையில் நல்லுறவை கடைபிடிப்பார்கள், பிரதமர் மோடி கூட எதிர்க்கட்சி தலைவர்களிடம் பரஸ்பரம் நட்பு பாராட்டுவார். அதுபோன்ற எந்த இணக்கமான செயலிலும் இறங்காமல், விமர்சனமும், தடாலடி மட்டுமே கைகொடுக்கும் என்று உறுதியாக இப்போதுவரை நம்புகிறார் அண்ணாமலை. அதை வெளிப்படையாகவே ‘நான் இப்படித்தான் இருப்பேன்’ என்று பெருமையாகவும் சொல்லிக்கொள்கிறார்.

பாஜக இப்போது வலுவாகத்தான் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் எப்போதுமே மாற்று அரசியல் கட்சிகளுக்கு ஒரு ஸ்பேஸ் இருக்கும். தமாகா, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளுக்கு ஆரம்பகட்டத்தில் இருந்த வரவேற்பு அப்படியானது தான். ஆனால், இப்போது அந்தக் கட்சிகளின் நிலையெல்லாம் என்னவென்று நமக்கேத் தெரியும். அதுபோலவே பாஜக பலகாலமாக தமிழக அரசியலில் இருந்தாலும், அண்ணாமலையில் அதிரடி அரசியல் குறிப்பிட்ட சில தரப்பிடம் வரவேற்பை பெற்றது. மத்தியில் பாஜக ஆட்சி என்ற பிம்பமும், வேறு சில ‘ஃபார்முலாக்களும்’ பாஜகவை பிரபலமாக்கியுள்ளது. ஆனால் அதெல்லாம் தேர்தலில் வெற்றிக்கான வாக்குகளாக வந்து குவியுமா என்பதை நிச்சயமாக சொல்வதற்கில்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜக என்றால் முன்பு கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், சென்னையின் சில பகுதிகளில் பலமாக இருக்கும். ஆனால் இப்போது எல்லா மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது அந்தக். இருப்பினும் எல்லா மாவட்டங்களிலும் வாக்குகளை வாங்கும் அளவுக்கு கட்டமைப்பு உருவாகியுள்ளதா என்பது சந்தேகமே.

பேரணிகள், நடைபயணத்திற்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்பதே கடந்தகால பாடம். சமூகவலைதளங்களில் பாஜக வலுவான கட்சியாக காட்டப்படுகிறது. ஊடகங்களிலும் அண்ணாமலைக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது. இதெல்லாம் வாக்குப்பெட்டிகளில் பாஜகவுக்கு வலு சேர்க்குமா என்பது தெரியவில்லை. அண்ணாமலை தலைவரான பின்னர் எதிர்கொள்ளப்போகும் பெரிய தேர்தல் என்றால், அது 2024 மக்களவைத் தேர்தல்தான். அதில் அவர் எப்படி கூட்டணி அமைப்பார், எதிர்கொள்வார், வெற்றிபெறுவார் என்பதுதான் அவரது தலைமைப்பண்பை வெளிகாட்டும்.

அண்ணாமலை திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணியை அமைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன. அண்ணாவை விமர்சித்ததை காரணமாக சொல்லியே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. எனவே ஓபிஎஸ், தினகரன் போன்றோர் இனி பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். அதுபோல பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளோடும் அண்ணாமலைக்கு இணக்கமான உறவு இல்லை. எடுத்தெறிந்து பேசும் அண்ணாமலை நம்மை எப்படி நடத்துவாரோ என்று இந்த கட்சிகளெல்லாம் நிச்சயமாக யோசிக்கும். ஆகவே அண்ணாமலை தலைமையில் பாஜக வலிமையான கூட்டணியை உருவாக்குவது சந்தேகம்தான்.

ஒரு தலைவராக தங்கள் கூட்டணியின் முக்கியமான கட்சி வெளியேறுவதற்கு காரணமாகியிருக்கிறார் அண்ணாமலை. இது அவருக்கு மிகப்பெரிய சறுக்கல். அதிமுக மீண்டும் கூட்டணியில் இணையாத பட்சத்தில், பாஜக தலைமையில் வலுவான கூட்டணியை அண்ணாமலை அமைக்கவேண்டும். அப்படி இல்லாமல் போனால் மக்களவைத் தேர்தலில் பாஜக முக்கிய பிளேயராகக்கூட இல்லாமல் ஓரங்கட்டப்படும். அப்படி நடந்தால் அது அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்துக்கும் மிகப்பெரிய கேள்விக்குறியாகி விடும்!

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in